மயிலாடுதுறை: தென்னிந்தியாவில் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று ஆயுத பூஜை. ஒவ்வொரு பெயர் கொண்டு அழைக்கப்படும் இந்த விழாவானது நவராத்திரியுடன் தொடர்புடையது. தேவி துர்கா, மஹிஷாசுரா என்ற அரக்கனை அஷ்டமி மற்றும் நவமி சந்திப்பில் கொன்றதாகவும், அதன் பின்னர் வதத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை தேவி கீழே போட்டு விட்டதாகவும் நம்பப்படுகிறது.
அந்த நாளை தான் ஆயுத பூஜையாக கொண்டாடத் தொடங்கினர். மேலும் ஆயுத பூஜை என்பது அரக்க ராஜாவை, தேவி துர்கா வீழ்த்தியதன் வெற்றியின் கொண்டாட்டமாகவே கருதப்படுகிறது. மகாபாரத புராணத்தின் படி, நாடுகடத்தப்பட்டதன் காரணமாக பாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனன் தனது ஆயுதங்களை ஒரு வன்னி மரத்தின் கீழ் மறைத்து வைத்து சென்றான்.
வனவாசம் முடிந்து ஒரு வருடத்திற்கு பின்னர் பாண்டவர்கள் திரும்பியபோது, தாங்கள் விட்டுச் சென்ற ஆயுதங்கள் அதே இடத்தில் இத்தனை நாளாக இன்னும் இருப்பதைக் கண்டு ஆச்சரிப்பட்டனர். ஆயுதங்களை மீட்டெடுத்த பிறகு, அவர்கள் வழிபாடு நடத்தி, குருக்ஷேத்திரப் போருக்கு சென்று வெற்றியை தமதாக்கினர். பின்னர், அவர்கள் விஜயதசமி நாளில் திரும்பி வந்து வன்னி மரத்தையும் வணங்கி சென்றனர்.
எனவே இந்தியாவின் சில பகுதிகளில், தசமி நாளில் வன்னி மரங்களுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகின்றது. பண்டைய காலங்களில், ஆயுதங்களை வணங்கும் நாளாகவே ஆயுத பூஜை திகழ்ந்தது. தற்போதைய நவீன காலக்கட்டத்தில், விஸ்வகர்மா பூஜையைப் போலவே, கருவி அல்லது கைவினைஞர்களின் கருவிகளுக்கும் மரியாதை செலுத்தும் விதமாக இது மாற்றப்பட்டுள்ளது.
ஆயுத பூஜையானது கைவினைஞர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், ஒவ்வொரு கருவிகளும் அந்தந்த தொழிலில் வெற்றியை அடைய உதவுகின்றன என்று நம்பப்படுகிறது. மேலும், அவர்கள் சிறப்பாக செயல்படுவதற்கும், வெகுமதி பெறுவதற்கும், வழிபாடு நடத்தப்படுகிறது. ஒரு வியாபார விருதி யந்திரத்தை வழிபடுவது உங்கள் தொழில்முறை உறவுகளை மேம்படுத்தவும், உங்கள் வணிகத்திற்கு நேர்மறையான மாற்றத்தை கொண்டு வரவும், தொழிலை விரிவுபடுத்தவும் உதவிடும்.
சமீபத்திய காலங்களில், மக்கள் தங்கள் வாகனங்களையும் வணங்க தொடங்கிவிட்டனர். எனவே, இது வாகன பூஜை என்றும் அழைக்கப்படுகிறது. எல்லா வகையான தீமைகளிலிருந்தும் விடுபட மக்கள் இந்த நாளில் தங்களது ஆட்டோக்கள், கார்கள், லாரிகள், ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை சுத்தப்படுத்தி வழிபாடு நடத்துகிறார்கள்.
அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தமிழகத்தின் தொன்மை வாய்ந்த ஆதீனங்களில் ஒன்றான தருமபுரம் ஆதீனத்தில் இன்று ஆயுதபூஜை விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஆதீன பூஜை மடத்தில், பார்வதி, லெட்சுமி மற்றும் சரஸ்வதி உருவத்தை வாகனம் செய்து சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதில், தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று, தருமபுரம் ஆதீனம் பட்டணப் பிரவேசத்துக்கு பயன்படுத்திய சிவிகைப்பல்லக்கு, நாற்காலி பல்லக்கு, பிரயாண பல்லக்கு, வெள்ளிப்பல்லக்கு, ஈட்டி, வாள், துப்பாக்கி, எடுபிடி உள்ளிட்ட ஆதீனத்தில் பயன்படுத்தப்பட்ட மற்றும் பயன்படுத்தபட்டுவரும் தொன்மைவாய்ந்த பொருட்கள் இடம்பெரும்.
மேலும் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் ஏர் கலப்பை, நெல் அளக்கும் கருவிகள், பழைமையான ஆதீன நூல்களுக்கும் சிறப்பு பூஜை செய்து, அம்மனுக்கு பஞ்சமுக தீபாராதனை உள்ளிட்ட சோடஷ உபசார தீபாராதனை உள்ளிட்ட 16 விதமான ஆராதனை செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். இதில், ஆதீன கட்டளைத் தம்பிரான் சுவாமிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: குலசை தசரா திருவிழா கோலாகலம்.. காளி உள்ளிட்ட வேடமணிந்து பக்தர்கள் வேண்டுதல்!