காரைக்கால்: சனிப்பெயர்ச்சியில் இன்று மாலை சனிபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம்பெயரும் நிலையில், திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலில், அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து, நளன் தீர்த்த குளத்தில் புனித நீராடி, 3 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
சனிபெயர்ச்சியை முன்னிட்டு, திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலில் மாணிக்கவாசகர் புறப்பாடு வெகு விமர்சையாக நடைபெற்றது. ஸ்ரீசனி பகவான் வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து, நிகழ்ச்சியில் செண்பக தியாகராஜர் மற்றும் பிராண அம்பிகை உற்சவவர்கள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அடுத்துள்ள திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலில், ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இங்கு சனிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். இங்கு நடைபெறும் சனிப்பெயர்ச்சி பிரசித்தி பெற்றதாகும்.
இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி, இன்று நடைபெற உள்ளது. இன்று மாலை 5.20 மணிக்கு ஸ்ரீ சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். இதனால், திருநள்ளாறில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
இதில் காரைக்கால் மட்டுமின்றி திருச்சி, கோயம்புத்தூர், சேலம், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
சனிபெயர்ச்சியை முன்னிட்டு, இன்று காலை சனிபகவானுக்கு விசேஷ அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில், ஸ்ரீ சனிபகவான் வெள்ளிக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக, பக்தர்கள் நளன் தீர்த்த குளத்தில் புனித நீராடி, ஸ்ரீ கலிதீர்த்த விநாயகரை வணங்கி, ஸ்ரீ சனிபகவானை வழிபட்டுச் சென்றனர். சனிப்பெயர்ச்சி இன்று மாலை நடைபெற இருப்பதால், மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மாலை நேரத்தில் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பக்தர்களின் கூட்டம் அதிகரிப்பால், ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். பக்தர்களுக்கு பல அமைப்புகள் அன்னதானம் வழங்கி வருகின்றனர். சனிபெயர்ச்சி முன்னேற்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகம் தீவிரமாக செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: “பொதுத்தேர்வு தேதியில் எந்த மாற்றமும் இல்லை” - அமைச்சர் அன்பில் மகேஷ்