மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா பாடகச்சேரி கிராமம் நண்டலாற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளப்படுவதாக பொதுமக்களுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவீரன் வன்னியர் சங்கத்தின் தலைவர் வி.ஜி.கே. மணி தலைமையில் பொதுமக்கள் அங்கு சென்றபோது ஆற்று ஓரம் கொட்டப்பட்டிருந்த ஆற்று மணலை ஜேசிபி இயந்திரம் மூலம் அள்ளியது தெரியவந்தது.
உடனடியாக மணல் அள்ளிய ஜேசிபி இயந்திரம், லாரியை கிராம மக்கள் பறிமுதல்செய்து பாலையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், அந்த வாகனங்கள் அதிமுக மயிலாடுதுறை மாவட்டச் செயலாளரும், பூம்புகார் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான பவுன்ராஜுக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது.
பின்னர், இது குறித்து செய்தியாளரிடம் மாவீரன் வன்னியர் சங்க நிறுவனத் தலைவர் வி.ஜி.கே. மணி கூறுகையில், "அதிமுக மாவட்டச் செயலாளர் பவுன்ராஜ் தொடர்ந்து லாரியில் திருட்டுத்தனமாக மணல் ஏற்றி அரசு ஒப்பந்த வேலைகள் செய்துவருகிறார். இது குறித்து பலமுறை புகார் அளித்தும் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை.
லாரிகளையும், ஜேசிபி இயந்திரங்களையும் பறிமுதல்செய்து ஒப்படைத்துள்ளோம். இது குறித்து காவல் துறை வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.