மயிலாடுதுறை: அரபிக்கடலில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அந்த வகையில், டெல்டா மாவட்டமான மயிலாடுதுறையில் கடந்த 6ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை தொடர் கனமழை பெய்தது.
இதன் காரணமாக, சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சுமார் 10,000 ஏக்கர் அறுவடைக்குத் தயாரான நெற்பயிர்கள் மழைநீரில் சாய்ந்து மூழ்கிப் பாதிக்கப்பட்டது. ஒரே நாளில் 30 செ.மீ அளவிற்கு மழை பொழிந்ததால் விளை நிலங்களில் மழைநீர் சூழ்ந்தது. இதனால், கவலையடைந்த விவசாயிகள் செய்வதறியாது திகைத்து வந்தனர்.
இந்நிலையில், மழை பெய்து 7 நாட்களாக விளை நிலங்களில் நீர் வடியாத காரணத்தால், நெற்பயிர்களில் முளை விடத் தொடங்கிவிட்டது. இதனையடுத்து விளை நிலங்களில் தேங்கிய தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியைத் துவங்கியுள்ளனர்.
காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து கடந்தாண்டு, முன்னதாகவே தண்ணீர் திறக்கப்பட்டது. இருப்பினும் கடைமடைப் பகுதியான சீர்காழி, கொள்ளிடம், தரங்கம்பாடி பகுதிகளுக்கு உரிய நேரத்தில் தண்ணீர் வந்து சேரவில்லை. இருந்த போதிலும் மின்மோட்டார்கள் மூலம் பாசனம் மேற்கொண்டு சம்பா சாகுபடியைத் துவங்கி இருந்தனர் விவசாயிகள்.
இந்நிலையில், திடீரென பெய்த கன மழை காரணமாக 10 முதல் 15 தினங்களுக்குள் அறுவடை செய்ய இருந்த நிலையில், சம்பா பயிர்கள் தண்ணீரில் சாய்ந்து மூழ்கியது. இதனால், எஞ்சிய சம்பா பயிர்களையாவது காப்பாற்ற வேண்டுமெனச் சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளைநிலங்களில் தேங்கிய மழைநீரை விவசாயிகள் மோட்டார் மூலம் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
இகு குறித்து விவசாயிகள் கூறுகையில், "பொதுப்பணி துறையினர் ஆய்வு மேற்கொண்டு வாய்க்கால்களைத் தூர்வாரி தர வேண்டும், மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு, வேளாண் துறை அதிகாரிகள் முறையாகக் கணக்கெடுத்து உரிய இழப்பீடு பெற்றுத் தர வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னதாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பயிர் பாதிப்புகளைச் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றுத்துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, இது தொடர்பாகத் தமிழக முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்று பாதிப்புக்குள்ளான பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். ஆனால், தற்போது வரை எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என விவசாயிகள் வேதனைப்படத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் சாலைப் பாதுகாப்பிற்காக ரூ 135.84 கோடி நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..