பூம்புகார் தொகுதி திமுக வேட்பாளர் நிவேதா எம்.முருகனை ஆதரித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று, செம்பனார்கோவில் கடைவீதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், “பாஜக செய்யும் ஒரே அரசியல் கலவரத்தை தூண்டும் மத அரசியல்தான். எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தபோது உள்ள அதிமுக தற்போது இல்லை. தற்போது இருப்பது மோடி அதிமுக.
மண்டல் கமிஷனில் ஓபிசி மக்களுக்கு இட ஒதுக்கீடு பரிந்துரையை ஒரு தலித் அமைப்பு கூட எதிர்க்கவில்லை. அதை எதிர்த்தது பாஜக மட்டும் தான். ஆனால், பாமக தற்போது பாஜகவை தோளில் தூக்கி சுமக்கிறது. பாஜகவில் பிரதமர் யார் என்பதைக் கூட ஆர்எஸ்எஸ் தான் தீர்மானிக்கிறது. அதன் துணை இயக்கமான பாஜகவை தமிழகத்தில் வளரவிட்டது அதிமுக, பாமகதான்.
அம்பேத்கர்-காந்தி இடையே கருத்து மோதல் இருந்தாலும், தலித் மக்கள் ஒருபோதும் காந்தியை அவமானப்படுத்தியதில்லை. ஆனால், மதச்சார்பின்மையை வலியுறுத்தியதற்காக காந்தியை சுட்டுக்கொன்றது ஆர்எஸ்எஸ். டெல்லியில் காமராஜர் தங்கியிருந்த வீட்டுக்கு தீவைத்து அவரை கொல்ல முயன்றது ஆர்எஸ்எஸ். விடுதலை சிறுத்தைகளுக்கு எவ்வளவு இடம் கிடைத்துள்ளது என்பதை விட, பாஜகவுக்கு தமிழ்நாட்டில் இடமே இல்லை என்ற நிலையை உருவாக்கவே திமுகவுடன் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கூட்டணி அமைத்துள்ளோம்” என்றார்.
இதையும் படிங்க: ’எடப்பாடி பழனிசாமி சிறைக்கு செல்வது உறுதி' - உதயநிதி