மயிலாடுதுறை: மயிலாடுதுறை ரயில்வே நிலைய நடைமேடையில் எஸ்.ஆர்.எம்.யு. ரயில்வே தொழிற்சங்கம் சார்பில் கண்டன வாயில் கூட்டம் நடைபெற்றது. இதில், மயிலாடுதுறை, கும்பகோணம் ரயில்வே கிளையைச் சேர்ந்த ரயில்வே தொழிலாளர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்க திருச்சி கோட்டத் தலைவர் மணிவண்ணன் தலைமையில் கோட்ட செயலாளர் வீரசேகரன் முன்னிலையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் எஸ்.ஆர்.எம்.யு. தலைவர் ராஜா ஸ்ரீதர் பங்கேற்று மத்திய அரசைக் கண்டித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜா ஸ்ரீதர், "ரயில்வே துறையின் தொழிலாளர் விரோதப்போக்கை கண்டித்து வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி நாடு முழுவதும் ரயில்வே பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த உள்ளனர்.
ரயில்வே பணிமனைகளை கார்ப்பரேஷனாக மாற்றுவது, மருத்துவமனைகளை மூடுவது, ரயில் நிலையங்களைத் தனியாருக்கு கொடுப்பது, 150 தனியார் ரயில்களை கொண்டுவருவது போன்ற செயல்களை மத்திய அரசு செய்துவருகிறது.
மத்திய அரசின் தனியார்மயத் திட்டம் ரயில்வே தொழிலாளர்களைவிட ரயிலை உபயோகப்படுத்தும் கோடிக்கணக்கான அடித்தட்டு மக்களையே அதிகம் பாதிக்கிறது என்பதால் இந்தத் திட்டத்தை கைவிடக்கோரி நாங்கள் போராடிவருகிறோம்.
ரயில்வே பொதுமக்களுக்கு செய்கின்ற சேவையின் காரணமாக ஏற்படுகின்ற செலவு கடந்த ஆண்டு 50 ஆயிரம் கோடி ரூபாய் என மத்திய அரசு அமைத்த எல்லா குழுக்களும் சொல்லியுள்ளன. ரயில்வே சேவைக்கான செலவை மத்திய அரசு ஈடுகட்ட வேண்டும் என்று அந்தக்குழுக்கள் குறிப்பிட்டுள்ளன.
கடந்த 10 ஆண்டுகளாக ரயில்வே துறையில் பணியாற்றுபவர்களுக்கு ஆன செலவை மத்திய அரசு கொடுத்திருந்தால் 3 லட்சம் கோடி ரூபாய் கையிருப்பு பணம் ரயில்வே துறையிடம் இருந்திருக்கும், தனியார் வசம் செல்லும் நிர்பந்தம் ரயில்வே துறைக்கு வந்திருக்காது.
மத்திய அரசாங்கம் தனது கடமையிலிருந்து சமூக பொறுப்பிலிருந்து விலகி போகிறது. மம்தா லாலுபிரசாத் அமைச்சர்களாக இருந்தபோது விரைவு ரயில்கள், அதிகளவில் சரக்குகளை ஏற்றிச் செல்லும் ரயில்கள் இயங்கியதால் வருமானம் கிடைத்தது.
அதன்பிறகு வந்த அமைச்சர்கள் சிந்தனை இல்லாமலும் ரயில்வே துறையை மேம்படுத்த அக்கறைக் காட்டாமல் தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும், இந்தியாவில் 400 ரயில்களை தனியாருக்கு கொடுக்க உள்ளனர், 119 வழித்தடங்களில் 150 ரயில்களை தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது மட்டுமன்றி 400 ரயில்வே நிலையங்கள் தற்போது தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த தொழிலாளர் விரோதப்போக்கினால், 4.5லட்சம் ரயில்வே ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து பிப்ரவரி 1ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்றார்.
இதையும் படிங்க: ஏழைகளின் ரதம் என்று கருதப்படும் ரயில்கள் தனியார் மயமாவது வரமா, சாபமா?