மயிலாடுதுறை: கதண்டு என்ற கொடிய விஷவண்டு அதிகளவில் காட்டுப்பகுதியில் காணப்படும். காடுகள் அழிக்கப்பட்டதால் பனைமரங்கள், தென்னை மரங்களில் கூடுகட்டி வசித்து வருகிறது. இந்த கொடிய விஷவண்டு கூட்டமாக வந்து தாக்கும் ஒருவரை 5க்கும் மேற்பட்ட கதண்டு பூச்சிகள் கடித்தால் உயிர்பிழைப்பது கடினம். தலையில் கடித்தால் விஷம் உடனடியாக மூளையை தாக்கும், கிட்னியை செயலிலக்க செய்யும். சிறு குழந்தைகளை இரண்டு வண்டுகள் கடித்தாலே உயிரிழக்க நேரிடும். வண்டுகள் இனத்தில் கொடிய விஷமுள்ள இந்த வண்டு கூடுகட்டியிருப்பதை அறிந்து தகவல் தெரிவித்தால் அதை உடனடியாக தீயணைப்புத் துறையினர் அழித்து வருகின்றனர்.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கங்கணம்புத்தூர் ஊராட்சியில் தேவனூர் கிராமத்திற்கு செல்லும் சாலையில் தனியார் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த சாலையில் இரண்டு பக்கமும் ஏராளமான பனைமரங்கள் உள்ளன. பள்ளிக்கூடம் வாயிலில் உள்ள பனைமரம் உள்ளிட்ட 2 பனைமரங்களில் கதண்டு வண்டுகள் பெரிய அளவில் கூடுகட்டி வசித்து வருகின்றன. இதனால் பள்ளி மாணவர்கள், தேவனூர் கிராமமக்கள் அச்சத்துடனேயே கதண்டு வசிக்கும் பகுதியை கடந்து சென்று செல்கின்றனர்.
இந்நிலையில், பழுதடைந்த கங்கணம்புத்தூர் - தேவனின் சாலையில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது. இரண்டு பக்கமும் பனைமரங்கள் உள்ள சாலையில் கடந்த 15ஆம் தேதி ஜேசிபி இயந்திரம் மூலம் பணிகள் தொடங்கப்பட்டபோது ஜேசிபி இயந்திரத்தின் சத்தத்தால் பனைமரத்தில் கூடுகட்டியிருந்த கதண்டு வண்டுகள் கூண்டில் இருந்து கலைந்து அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தின. இதில் சாலை பணியாளர் ஒருவர் காயமடைந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளார்.
இதனால் சாலை பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் தேவனூர் கிராமத்திற்குச் செல்லும் பொதுமக்கள் மாற்றுபாதையில் சென்று வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தினரிடம் தகவல் தெரிவித்தும் விஷகதண்டுகள் அழிக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
மேலும், தார்சாலை அமைக்கும் பணியும் நிறுத்தப்பட்டுள்ளது, பள்ளி மாணவர்களும் மாற்ற பாதையில் செல்வதால் பள்ளிக்கு தாமதமாக செல்ல வேண்டிய சூழல் ஏற்படுவதாகவும் கூறும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு கொடிய விஷம்கொண்ட கதண்டுகளை தீயணைப்புத் துறை மூலம் அழித்துவிட வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதையும் படிங்க: வேலை வாங்கி தருவதாக கூறி வடமாநிலத்தவர்கள் கடத்தல்.. 7 பேர் கைது!