புதிதாக உருவாகியுள்ள மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு, மூங்கில் தோட்டத்திலுள்ள தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான இடம் தேர்வுசெய்யப்பட்டு, அளவீட்டுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
ஆதின இடத்தில் குடியிருக்கும் வீடுகளுக்குப் பாதிப்பு இருக்காது என்று கூறப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்குத் திறந்தவெளி இடங்களை விட்டு விட்டு வீடுகளின் அருகேவுள்ள இடங்களை அளவீடு செய்ததால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும், வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தி, தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தொடர்ந்து, அலுவலகத்தின் மூலம் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால், உடனடியாக அளவீடு செய்யும் பணிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என மாவட்ட தனி அலுவலரிடம் புகார் மனு அளித்தனர்.
இது தொடர்பாகப் பேச்சுவார்த்தைக்கு வந்த மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராதாகிருஷ்ணன், அதிமுக மாவட்டச் செயலாளர் வி.ஜி.கே. செந்தில்நாதன் ஆகியோரிடமும் கோரிக்கைவைத்தனர்.
இதையடுத்து, அவர்கள் குடியிருப்புப் பகுதிகளுக்கு இடையூறு இல்லாமல் அளவீடு செய்ய அறிவுறுத்துவதாகக் கூறி பொதுமக்களைச் சமாதானப்படுத்தினர்.
இதையும் படிங்க: தென்காசிக்கு ஆட்சியர் அலுவலகம் வருமா? வராதா?