நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை கச்சேரி சாலையைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் மனைவி ராஜராஜேஸ்வரி. ஜெயக்குமாருக்கும், அவரது தாய், சகோதரர்களுக்கு இடையே சொத்து பிரச்னை ஏற்பட்டு, அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கடந்தமாதம் ஜெயக்குமார் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.
அவர் இறப்பதற்கு முன் தன் சாவுக்கு தனது சகோதரர்கள், மயிலாடுதுறை காவல்துறையினரே காரணம் என ஜெயக்குமார் எழுதிய கடிதம் கிடைத்ததாகக் கூறி, மயிலாடுதுறை கோட்டாட்சியரிடம் ராஜராஜேஸ்வரி கடந்த 20ஆம் தேதி புகார் அளித்திருந்தார். அதில், ”நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், காவல்துறை கட்டபஞ்சாயத்து செய்து சொத்தை பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று மிரட்டுவதாகவும், தன்மீது பொய்வழக்கு போட்டுள்ளதாகவும்” குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இறந்துபோன ஜெயக்குமாரின் தாயார், ”தன் மகன் சாவில் சந்தேகம் உள்ளதாகவும், விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, மயிலாடுதுறை கோட்டாட்சியரிடம் நேற்று (மே 27) தனது குடும்பத்தினருடன் வந்து மனு அளித்தார். அதில் தனக்கு ஜெயக்குமார், பிரகாஷ், கோபாலகிருஷ்ணன் மற்றும் சித்ரா என மூன்று மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், எனது மருமகள் ராஜராஜேஸ்வரிக்கும், வெங்கட் என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாகவும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே தனது மகன் ஜெயக்குமார் தற்கொலை செய்து கொண்டதாகவும், அதற்கு காரணமான மருமகள் ராஜராஜேஸ்வரி, வெங்கட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார். மேலும், ஜெயக்குமார் இறப்பதற்கு முன்பு எழுதி வைத்ததாக கொடுக்கப்பட்ட கடிதம் போலியானது என்றும் கூறினார்.
பின்னர், தன் மகன் எழுதிய வாடகை உயர்வு பத்திரத்தை காண்பித்தார்”. குடும்ப சொத்து பிரச்னையில் இருதரப்பினரும் பரஸ்பரம் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தனிமைப்படுத்தும் இடங்கள் சுத்தமாக இல்லை - மாலத்தீவிலிருந்து வந்தவர்களின் வைரல் காணொலி