மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், மயிலாடுதுறையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ”தமிழ்நாடு மக்களைப் பற்றி சிந்திக்காமல் தொடர்ந்து ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது.
புதிதாக நான்கு கிணறுகள் அமைக்கப்படவுள்ளன. அதன்படி, நாகையில் உள்ள மாதானம், திருவாரூரில் உள்ள நன்னிலம், கடலூர் புவனகிரி, தஞ்சையில் பந்தநல்லூர் ஆகிய பகுதிகளில் கிணறுகள் அமைக்கப்படவுள்ளன.
இதில், இரண்டு இடங்களில் ஏற்கனவே திட்டப்பணிகள் நடைபெற்றுவருவதாகவும், தமிழ்நாட்டில் மேலும் 23 இடங்களில் கிணறுகள் அமையவுள்ளதாகவும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகின்றார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு சி.வி. சண்முகம் அளித்த பதில் திருப்திகரமாக இல்லை. எண்ணெய் நிறுவனங்கள் விண்ணப்பங்களை அளித்துள்ளனர். இதை ஏற்க முடியாது என்று கூறும் தமிழ்நாடு அரசு ஏன் இதுவரை அதிகாரப்பூர்வமாக விண்ணப்பங்கள் நிராகரிக்கவில்லை ?
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அமைத்த வல்லுநர் குழுவில், மீத்தேன் திட்டங்களால் காவிரிப்படுகை பாதிக்கப்படும், பூகம்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அந்த வல்லுநர்கள் குழுவின் அறிக்கையே போதுமானது.
மேலும், இதுபோன்ற திட்டங்களை ஏற்படுத்த வேண்டுமென்றால் எங்களை கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று ஜெயலலிதா அரசு ஆணை வெளியிட்டது. அதற்கு எதிராக மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது. இப்பிரச்னையை தமிழ்நாடு அரசு முறையாக அணுக வேண்டும்.
அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுவதுபோல் கிரிமினல் வழக்கு தொடர்வதால் எந்த பிரயோஜனமும் இல்லை. ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை என்ற கொள்கை முடிவு அறிவிக்க வேண்டும்.
காவிரி படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சிறப்பு சட்டம் ஏற்ற வேண்டும். கட்சி வேறுபாடு இன்றி இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே சட்டம் இயற்ற வேண்டும்" என்றார்.