மயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. ஜெயராமன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலிருந்து இந்தியாவை மீட்க மத்திய அரசு ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது.
இதனை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். தற்சார்பு இந்தியா என்ற பெயரில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம் தனியார் சார்பு திட்டமாக அமைந்திருக்கிறது. சிறிய தொழில்களிலிருந்து, அணுசக்தி வரை அனைத்தையும் தனியாருக்கு தாரை வார்ப்பதாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது.
நிலக்கரி வயல்கள் எங்கெல்லாம் உள்ளனவோ அங்கெல்லாம் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கத் திட்டமிட்டுள்ளனர். இதுவரை அரசு மட்டுமே மேற்கொண்டுவந்த நிலக்கரி எடுப்புப் பணியில் இனி தனியாரை ஈடுபடுத்த உள்ளனர். இதற்காக 50 நிலக்கரி தொகுப்பு பரப்புகள் ஏலம் விடப்பட உள்ளன. இந்த நிலக்கரியை பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு ரூ.50 ஆயிரம் கோடி செலவில் அதற்கான கட்டமைப்பை ஏற்படுத்த உள்ளனர். பல்வேறு இடங்களில் கனிமவள சுரங்கங்கள் அமைக்கப்பட உள்ளன.
இதற்காக 500 இடங்களை தேர்ந்தெடுத்துள்ளனர். உலகமெங்கும் எதிர்க்கும் திட்டமான மீத்தேன் எடுக்கும் திட்டத்தை நீரியல் விரிசல் முறையை பயன்படுத்தி எடுக்க உள்ளனர். அதுமட்டுமின்றி பாக்சைடு எடுப்பதற்காக மலைகளை எல்லாம் தனியாரிடம் ஒப்படைக்க உள்ளனர்.
காவிரிப்படுகையின் பல பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டால் தமிழ்நாட்டின் பிற பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும். எனவே, இந்த நாசகாரத் திட்டங்களை தமிழ்நாட்டில் அரசு அனுமதிக்கக்கூடாது. அவ்வாறின்றி இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் மக்களைத் திரட்டி போராட்டங்கள் நடத்தப்படும்" என்றார்.
இதையும் படிங்க: அரசு அறிவித்த ரூ.20 லட்சம் கோடியின் முழு விவரம்