நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் இருந்து 10 கி.மீ. துாரத்தில் அமைந்துள்ள சுந்தரேச விலாஸ் உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் தான் இவர் பணியாற்றுகிறார். பருவ மழையில் மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இருப்பதைத் தடுக்க தனது சொந்த செலவில் குடைகளை வாங்கி 15 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கியுள்ளார். இந்த கரோனா காலத்தில் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று கல்வி தொடர்பான உதவிகளை செய்து வருகிறார். அவரிடம் பேசினோம்.
"கடந்த 28 ஆண்டுகளாக பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றிவருகிறேன். முன்னர் பள்ளிக்கு வராத குழந்தைகளின் பெற்றோரிடம் பேசி அவர்களை பள்ளிக்கு அழைத்து வருவது வாடிக்கையாக இருந்தது. குழந்தைகளை குளிப்பாட்டி, உடை உடுத்தி, பள்ளிக்கு அழைத்து வந்து, சிற்றுண்டி வாங்கிக் கொடுப்பேன். சிற்றுண்டிக்காகவே பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்கு வர தொடங்கினர்.
அனைவரையும், என் குழந்தைகளாக நினைத்து, அவர்களுடன் விளையாடி, கல்வியோடு, சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுக் கொடுத்தேன்” என்றார்.
ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளரும்' என்பர். இது, என் வாழ்வில் நிஜமாகவே நிகழ்ந்தது என்கிறார் வசந்தா. இவருடைய மூத்த மகள் சென்னை தனியார் மருத்துவமனையில் மனநல மருத்துவராக பணியாற்றிவருகிறார். இரண்டாவது மகள் நீட் தேர்வில் நாட்டில், 11ஆவது இடத்தை பிடித்ததால் அரசு உதவித் தொகையுடன் டெல்லியில் உள்ள பிரபல மருத்துவ கல்லுாரியில் படித்து வருகிறார்.
தனது சேவைக்கு மகள்களின் உதவி குறித்து ஆசிரியர் வசந்தா கூறுகையில், “கஜா புயலால் எங்கள் பகுதி பாதிக்கப்பட்டது எனது மகள்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் உதவியுடன் 50 லட்சம் ரூபாய் நிதி திரட்டினோம். ஒரு வீட்டிற்கு 3 ஆயிரம் ரூபாய் வீதம், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண பொருள்களை வழங்கினோம்“ என்றார்.
தற்போது தமிழ்நாடு அரசின் கரோனா நிவாரண நிதிக்காக 50 ஆயிரம் ரூபாய், கரோனா ஊரடங்கு காலத்திலும் 30 லட்சம் வரை தன் சொந்த பணத்தில் மக்களுக்கு உதவி வருகிறார் வசந்தா டீச்சர்.
இவரது கல்வி சேவையை பாராட்டி, தமிழ்நாடு அரசு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது உள்பட 30க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:'காந்திகிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக உயர்த்துங்கள்'- நிறைவேறுமா நல்லாசிரியரின் கோரிக்கை!