மஞ்சள் காமலையால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்குப் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு அந்நோயின் தாக்குதல் ஏற்படாமல் இருக்க ஹைபடைடிஸ்பி இம்யூனோகுளோபூலின் என்ற தடுப்பு ஊசி போடப்படுவது வழக்கம்.
குறிப்பாக, பிரசவிக்கும் கர்ப்பிணிகளில் நூற்றில் ஒருவருக்கே இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது. இந்தத் தடுப்பு (ஹைபடைடிஸ் பி இம்யூனோகுளோபூலின்) மருந்து மருத்துவமனைகளில் அதிக நாள்கள் வைத்திருப்பதால் காலாவதியாகிறது.
இதனால், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் இந்த மருந்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மஞ்சள் காமாலை உள்ள கர்ப்பிணிகளுக்கு பிறக்கும் குழந்தைக்கு 24 மணி நேரத்தில் தடுப்பு மருந்து செலுத்த வேண்டியது அவசியம். தற்போது, இந்த ஹைபடைடிஸ் பி இம்யூனோகுளோபூலின் மருந்து இல்லாததால், பாதிக்கப்பட்ட மக்கள் தனியார் மருந்தகங்களில் வாங்கிவர நிர்பந்திக்கப்படுகின்றனர்.
இந்த மருந்து வெளிசந்தையில் ஐந்தாயிரத்து 250 ரூபாய்க்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்க வசதியில்லாமல் சிலர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். இதுபோன்ற ஏழை எளிய மக்களை அதிக விலை கொடுத்து மருந்து வாங்கச் சொல்வது அதிர்ச்சியளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது, மயிலாடுதுறை பெரியார் அரசு மருத்துவமனையிலேயே மஞ்சள் காமாலை நோய்க்கான தடுப்பு மருந்து இல்லாவிட்டால், மற்ற சிறிய ஊர்கள், கிராமங்களின் நிலை என்ன என்று கேள்விக்குறியாகிறது. இதுகுறித்து அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கைவைத்தனர்.
இதையும் படிங்க: ஒருதலைக் காதலால் உடன்கட்டை ஏறிய இளைஞர்? - காவல் துறை சந்தேகம்