மயிலாடுதுறை: நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து கடந்த 2020 ஆண்டு மயிலாடுதுறை பிரிக்கப்பட்டு தமிழகத்தின் 38வது மாவட்டமாகி தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த நிலையில், மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனை, தமிழக அரசால் மாவட்ட தலைமை மருத்துவமனையாகத் தரம் உயர்த்தப்பட்டு உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் மட்டுமல்லாமல் திருவாரூர், கடலூர், தஞ்சாவூர் ஆகிய அண்டை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பெரும்பாலானோர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையை நாடி, சிகிச்சை வருகின்றனர். இந்த மருத்துவமனையில் ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளங் குழந்தைகள் மையம் ஐந்து மாடிக் கட்டிடத்தில் அமைந்துள்ளது.
மேலும் இக்கட்டிடத்தில் கர்ப்பிணிப் பெண்கள் பிரிவு, மயக்க மருந்து பிரிவு, பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு, சுகாதார பணிகள் இணை இயக்குநர் அலுவலகம் மற்றும் ஐந்தாவது தளத்தில் கர்ப்பிணிப் பெண்கள் அறுவை சிகிச்சைப் பிரிவு உள்ளது. மயிலாடுதுறை மற்றும் அண்டை மாவட்டத்தைச் சேர்ந்த பல கர்ப்பிணிப் பெண்கள் பிரசவத்திற்காக இங்கு அனுமதிக்கப்படும் நிலையில், அவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாவது தளத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு 5வது தளத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஐந்து தளத்திற்கும் சென்று வருவதற்கு இக்கட்டிடத்தில் 2 லிப்ட்கள் (மின்தூக்கிகள்) இருந்த நிலையில்,1 லிப்ட் பழுதாகிவிட்டது. இந்த பழுதாகிப் பல மாதங்கள் ஆகிவிட்டது. ஒரு லிப்ட் மட்டும் இயங்கி வந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக அந்த லிப்ட்டும் பழுதாகிவிட்டது.
இதனால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குழந்தை பெற்ற தாய்மார்கள் குணமடைந்து வீட்டிற்குச் செல்வதற்கு மாடிப்படியில் இறங்கிச் செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கர்ப்பிணிப் பெண்கள் தரைதளத்திற்கு வந்து தினந்தோறும் உடல் பரிசோதனை செய்ய வேண்டியிருப்பதால், தினமும் படியிறங்கி அவதியுற்று வருகின்றனர். இதனை அடுத்து கர்ப்பிணிப் பெண்களின் நலன் கருதி லிப்டை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகம், “சென்னையிலிருந்து லிப்ட பழுது நீக்கும் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு, 1 லிப்ட் சரி செய்யப்பட்டுள்ளது. 5 பேர் லிப்ட்டில் சென்று வரத் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டு உள்ளது. 2வது லிப்ட் பழுது நீக்கம் செய்யப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நிவாரணத் தொகை பெற்று தந்த மாவட்ட ஆட்சியர்.. மேளதாளத்துடன் சீர்வரிசை கொண்டு வந்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!