மயிலாடுதுறை : தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் ‘பயோமெட்ரிக்’ எனப்படும், கைவிரல் ரேகை பதிவு முறையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக அரசின் விலையில்லா பொருள்கள் பெற ரேஷன் கடைகளுக்கு குடும்ப அட்டைதாரர்கள் வரும்போது ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், தாமதமின்றி பொருள்களை பெற்று செல்ல ஏதுவாக கைவிரல் ரேகை பதிவுமுறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 லட்சத்து 71 ஆயிரத்து 401 குடும்ப அட்டைதார்களுக்கு கைவிரல் ரேகை பதிவு இல்லாமல் பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று (ஜன.12) முதல் மீண்டும் பயோமெட்ரிக் முறை அமலுக்கு வந்துள்ளது.
கரோனா பரவும் அபாயம்
இதைத் தொடர்ந்து மயிலாடுதுறை கூட்டுறவு சிறப்பு அங்காடியில் காலை முதல் பயோமெட்ரிக் முறையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி வருகின்றனர். நாளை மறுதினம் தைப் பொங்கல் கொண்டாட உள்ள நிலையில் ஏராளமான பொதுமக்கள் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க வரிசையில் நின்று காத்திருந்து தற்போது கைவிரல் ரேகை பதிவு செய்து பொங்கல் பரிசை வாங்கிச் செல்கின்றனர்.
கரோனா தொற்றின் மூன்றாவது அலையின் வேகம் அதிகரித்துள்ள நிலையில் தகுந்த இடைவெளியை பின்பற்றாமல் பெரும்பாலான மக்கள் பொங்கல் பரிசு பொருள்களை பெற்று செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டோக்கன் வழங்கப்படாமல் பயோமெட்ரிக் முறையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து கரோனா தொற்று அதிகரிக்கும் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், பயோமெட்ரிக் முறையை ரத்து செய்து பொருள்களை வழங்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க : கொடைக்கானல் செட்டியார் பூங்காவை பராமரிக்க கோரிக்கை