நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள கடலங்குடி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வீரப்பன், அவரது மனைவி அமுதா. இவர்கள் இருவரும் தங்களது முன்னோர்கள் வாழ்ந்த இடத்தில் வசித்துவருகின்றனர். இருந்தும் வீரப்பன் -அமுதா தம்பதி வசிக்கும் இடம் அரசுக்குச் சொந்தமான நத்தம் புறம்போக்கு நிலம் என்று அப்பகுதியைச் சேர்ந்த சங்கரன் என்பவர் கூறிவந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, பொய்யான சான்றுகள் மூலம் அந்த இடத்தை தன் பெயருக்கு பட்டாவாக மாற்றிக் கொண்டதாகக் கூறி வீரப்பன் மீது மயிலாடுதுறை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். சென்னை உயர் நீதிமன்றம் வரை சென்றும் வீரப்பன் -அமுதா தம்பதிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், வழக்கில் தோல்வியடைந்த சங்கரன் குத்தாலம் காவல் நிலையத்தில் வீரப்பன் மீது புகார் அளித்து காவல் நிலையத்தில் வீரப்பனிடம் விசாரணை மேற்கொண்டதாகத் தெரிகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வீரப்பன்-அமுதா தம்பதியர், காவல் துறையினர் சங்கரனுக்கு ஆதரவாக இருந்து கொண்டு தங்களை மிரட்டுவதாகக் கூறி மயிலாடுதுறை கோட்டாட்சியர் கண்மணியிடம் புகார் அளித்தனர். புகாரை ஏற்றுக்கொண்ட கோட்டாட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.