ஆகஸ்ட் மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதனால், நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பகுதிகளில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டு தெருக்கள் வெறிச்சோடின. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் எல்லை முடிவு காரைக்கால் மாவட்டம் எல்லை ஆரம்பம் ஆகிய இரு மாவட்ட எல்லையில் தமிழ்நாடு, புதுச்சேரி மாநில காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாகை மாவட்ட எல்லையான தரங்கம்பாடி அருகே நண்டலாறு சோதனைச்சாவடியில் பொறையாறு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இ-பாஸ் அனுமதி இல்லாமல் வரும் கனரக வாகனங்கள், கார், வேன், இருசக்கர வாகனங்களில் வருபவர்கள், பாதசாரிகள் ஆகியோரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர்.
இதேபோல், காரைக்கால் மாவட்டத்தில் குறைந்த விலைக்கு கிடைக்கும் சாராயத்தை வாங்கச் செல்லும் மதுப்பிரியர்களை திருப்பி அனுப்பினர். இருந்தபோதிலும் மதுப்பிரியர்கள் காவலர்கள் அசரும் நேரம் பார்த்து சோதனைச்சாவடிக்கு பின்புறமாக மின்னல் வேகத்தில் காரைக்கால் பகுதியில் உள்ள மதுக்கடைக்கு சென்று வருகின்றனர்.