நாகை மாவட்டம் சீர்காழி அருகே நெப்பத்தூரில் சவுடுமண் குவாரி இயங்கிவருகிறது. இந்தக் குவாரியால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாகவும், சவுடு மண் ஏற்றிச் செல்லும் லாரிகளால் சாலைகள் சேதமடைவதாகவும் அப்பகுதியினர் புகார் கூறுகின்றனர்.
மேலும் லாரிகள் வேகமாகச் செல்வதால் தங்களது குழந்தைகள் விபத்தில் சிக்கும் ஆபத்தும் உள்ளது எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆகவே குவாரியை மூட வலியுறுத்தி அங்கு சவுடு மண் ஏற்றிய 20-க்கும் மேற்பட்ட லாரிகளைச் சிறைப்பிடித்து 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து குவாரி வாயிலில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவெண்காடு காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல் துறையினர் கலைந்துசெல்ல அறிவுறுத்தியும், கிராம மக்கள் கேட்காமல் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
கைதுசெய்து வேனில் ஏற்றும்போது தகுந்த இடைவெளி இல்லை எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: கரோனா காலத்தில் சூரிய கிரகணம் எப்படி இருக்கும்?