மயிலாடுதுறை: சீர்காழி, தென்பாதி மேட்டு தெருவை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் மகன் கனிவண்ணன் (30). இவர் கேட்டரிங் படித்துவிட்டு சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார். அதைத் தொடர்ந்து, கடந்த 2 ஆம் தேதி இரவு சீர்காழி உப்பனாற்று கரையில் கனிவண்ணன் தனது மோட்டார் சைக்கிள் அருகில் தலையில் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.
பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சீர்காழி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கனிவண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மறுநாள் காலை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கனிவண்ணனின் உடல் அனுப்பப்பட்டு பிரேத பரிசோதனை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, கனிவண்ணனின் உடலை வாங்க மறுத்த அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் மயிலாடுதுறை பொறுப்பு எஸ்பி ஜவகர் சீர்காழியில் முகாமிட்டு விசாரணையை தீவிர படுத்தினர்.
இந்நிலையில் மயிலாடுதுறை தாலுகா சேத்தூர் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவரும், சீர்காழி ஆர்விஎஸ் நகரில் வசித்து வருபவருமான மத்திய துணை ராணுவ படை வீரர் தேவேந்திரன் (53), என்பவரிடம் இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் கனிவண்ணன், தேவேந்திரன் இருவருக்கும் இடையே கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பழக்கம் இருந்தது தெரிய வந்துள்ளது.
தற்போது இந்த சம்பவத்திற்கு முன்பு பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த வாக்குவாதத்தில் தேவேந்திரனின் குடும்பத்தினரை பற்றி கனிவண்ணன் தவறாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தேவேந்திரன் துப்பாக்கியை எடுத்துச் சென்று உப்பனாறு கரையில் தனது இருசக்கர வாகனத்தில் அமர்ந்தபடி செல்போனில் பேசிக் கொண்டிருந்த கனிவண்ணனை சுட்டு கொலை செய்ததும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து தேவேந்திரனை கைது செய்த போலீசார், அவர் அனுமதி பெறாமல் வைத்திருந்த ஏர்கன், நாட்டு கை துப்பாக்கி, அதற்குரிய 7 தோட்டாக்கள் மற்றும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட பிஸ்டல் துப்பாக்கி மற்றும் அதற்குரிய 19 பயன்படுத்தப்படாத தோட்டாக்கள், டம்மி துப்பாக்கி ஒன்று என நான்கு துப்பாக்கிகள் மற்றும் இறந்த கனிவண்ணனின் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட மத்திய துணை ராணுவ படை வீரர் தேவேந்திரன், மருத்துவ பரிசோதனைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.