கரோனா வைரஸ் தாக்கம் குறையாத காரணத்தினால் நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசியத் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும் தடையை மீறி, சாலையில் சுற்றித்திரியும் மக்களைக் காவல் துறையினர் கண்டித்து வருகின்றனர்.
இந்த ஊரடங்கால் மிகவும் பாதிக்கப்பட்ட இளைஞர்கள், வீட்டிலேயே இருக்க முடியாக காரணத்தினால் கிரிக்கெட், கேரம் போன்ற விளையாட்டுகளை பொது இடத்தில் விளையாடி காவல் துறையிடம் வசமாக சிக்கி, பூசை வாங்கி வருகின்றனர். தற்போது, இதற்கும் ஒருபடி மேலாகச் சென்று பொது இடத்தில் இளைஞர்கள் கறி விருந்து நடத்தி வருவது வாடிக்கையாக உள்ளது.
நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள வில்லியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று திரண்டு பிரியாணி சமைத்து சாப்பிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, சாப்பிடுவதை காணொலியாக படம் பிடித்து டிக்டாக் சமூக வலைதளத்தில் பதிவிட்டது தற்போது வைரலாகியுள்ளது. பிரியாணி வாசனை காற்றில் பறப்பது போல, இந்த வீடியோவும் காற்றில் வைரலாகப் பரவி, காவல் துறையின் வாசலில் சென்று நின்றுள்ளது.
இதையடுத்து, மணல்மேடு காவல் துறையினர் நடத்திய விசாரணையில், 10 இளைஞர்களுக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், 10 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு முன்னதாக, தஞ்சாவூரில் "கரோனா விருந்து" நடத்தி, அதை பேஸ்புக்கில் நேரலை செய்த இளைஞர்களை காவல் துறையினர் கைதுசெய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பல நாள் ஆதங்கம்... 'கறிக்காக ஒன்று திரண்ட இளைஞர்கள்'