நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட மாநிலத் தலைவர் ஜி.கே. மணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களைச் செயல்படுத்தினால் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் பாலைவனமாக மாறும். இதனால் பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் ஆரம்பம் முதலே எதிர்த்ததோடு காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கைவைத்தனர்.
ராமதாஸுக்குப் பாராட்டு விழா
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்ததில் வைத்த 10 நிபந்தனைகளில் முதன்மையானது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பதுதான்.
அதனை தற்போது தமிழ்நாடு அரசு அறிவித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அரசிதழில் வெளியிட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்திய பாமக நிறுவனர் ராமதாஸ், எம்.பி. அன்புமணி ஆகியோருக்கு வரும் 14ஆம் தேதி மயிலாடுதுறையில் தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் பாராட்டு விழா பொதுக்கூட்டம் நடத்தவுள்ளோம்.
மருத்துவக் கல்லூரி கோரிக்கை
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில பகுதிகள் விடுபட்டுள்ளதைச் சேர்க்க வேண்டும். காவிரி பாசன வசதிபெறும் அனைத்துப் பகுதிகளையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.
மயிலாடுதுறை மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அரசு அறிவிப்பதோடு, மருத்துவக் கல்லூரியை இப்பகுதியில் அமைக்க வேண்டும்.
மத்திய அரசுக்கு எதிர்ப்பு
திருக்கோயிலுக்குப் பிரசித்திப்பெற்றது தமிழ்நாடு. இது தமிழர்களின் கலாசாரத்தையும் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் காட்டுகிறது. இதனை மத்திய அரசு கையகப்படுத்தினால் அதன் புனிதத்தன்மை கெடும்.
ஆகவே மத்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய, பழமையான திருக்கோயில்களைத் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான முயற்சியை மேற்கொண்டிருப்பது தமிழ்நாட்டிற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு இதனைக் கைவிட வேண்டும். 2002ஆம் ஆண்டு மத்திய அரசின் தொல்லியல் துறை திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலைக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காக அறிவித்தபோது அப்பகுதி மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
அறிவுறுத்தல்
2005ஆம் ஆண்டு அதனைக் கைவிட்டது. அந்த நடைமுறையிலிருந்த மூன்று ஆண்டுகள் பராமரிப்பு இன்றி கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்தது. ஆந்திராவில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தை மத்திய அரசு எடுக்க முயற்சி செய்தபோது கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால் அதனை மத்திய அரசு கைவிட்டது.
தமிழ்நாட்டில் உள்ள பழமைவாய்ந்த பண்பாட்டைக் காக்கின்ற கோயில்களை மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் எடுக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும்.
சாதிவாரி கணக்கெடுப்பு
2021ஆம் ஆண்டு மத்திய அரசு மக்கள் தொகையை கணக்கெடுக்கும்போது சாதிவாரியாக எடுக்க வேண்டும். 1931ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. அதன் பின்பு மக்கள் தொகை கணக்கெடுப்பு மட்டும்தான் எடுக்கப்பட்டுவருகிறது.
69 விழுக்காடு இட ஒதுக்கீடு உள்ளது. இந்த இட ஒதுக்கீட்டை எந்த அளவுகோல் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றம் கேட்டபோது சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் என்ற நெருக்கடி உருவாகியுள்ளது.
உரிமை
தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டுவதற்குச் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். இதனை மத்திய அரசு நடத்தவில்லை என்றாலும் தமிழ்நாடு அரசு நடத்த வேண்டும். அப்போதுதான் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை தக்கவைத்துக்கொள்ள முடியும்.
கர்நாடகா, பிகார், மகாராஷ்டிரா, அஸ்ஸாம், ஹரியானா போன்ற மாநிலங்களின் சட்டப்பேரவைகளில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் தமிழ்நாடு அரசும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
நெல் கொள்முதல்
டெல்டா மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்வதற்குப் பல நாள்கள் விவசாயிகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
மேலும் கட்டுப்படியான விலை கிடைக்காததால் விவசாயிகள் நஷ்டம் அடைகின்றனர். தமிழ்நாடு அரசு நெல்லுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும்.
தொடரும் கூட்டணி
தமிழ்நாட்டின் வறட்சியைப் போக்குவதற்காக நீர் மேலாண்மை திட்டங்களைக் கொண்டுவர வேண்டும். கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தை மத்திய அரசுடன் தொடங்குவதற்கான நிதியை நடப்பாண்டு ஒதுக்கீடு செய்து பணியை ஆரம்பிக்க வேண்டும்.
இவ்வாறு பாமக தலைவர் ஜி.கே. மணி கூறினார்.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டம் குடியை கெடுக்கின்ற சட்டம் - வேல்முருகன்