மயிலாடுதுறை: பழமைவாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் நடைபெறவுள்ள ஆதீனகுரு முதல்வரின் குருபூஜை தினத்தன்று பட்டினப்பிரவேசம் என்ற நிகழ்ச்சியில், ஆதீன கர்த்தரை பல்லக்கில் அமர்த்தி, மனிதர்கள் தூக்கி செல்வது மனித உரிமையை மீறிய செயல் என்று திராவிடர் கழகம் உள்ளிட்ட சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் அவ்வாறு ஆர்ப்பாட்டம் நடைபெற்றால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் அறிக்கையில் பட்டினப்பிரவேச நிகழ்ச்சியை தடை செய்திட கேட்டுக்கொண்டுள்ளார்.
அதன்பேரில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 23இன்படி சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதாலும்; பட்டினப் பிரவேச நிகழ்வில் ஆதீனகர்த்தரை பல்லக்கில் அமர வைத்து மனிதர்கள் தூக்கிச் செல்ல தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவிற்கு பல்வேறு ஆன்மிகப்பேரவைகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் மயிலாடுதுறை ஆன்மிக சமயப் பாதுகாப்பு பேரவையினர் கோட்டாட்சியரின் தடை உத்தரவை திரும்பப்பெற்று தருமபுர ஆதீன பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியை தடையின்றி நடத்த ஆவணம் செய்ய வேண்டி மாவட்ட ஆட்சியர் லலிதாவிடம் மனு அளித்துள்ளனர்.
ஆதீனகர்த்தரை சொக்கநாதபெருமானாக கருதி, வணங்கி, பக்தர்கள் பூரணகும்பமரியாதையுடன் பூஜைகள் செய்து கொலுபீடத்தில் அமரவைத்து கடவுளாக பாவிப்பர். பலநூற்றாண்டுகளாக பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஆன்மிக நிகழ்வுகளை நடத்த அரசு தடை ஏற்படுத்தாமல் சிறப்பாக நடத்த அனுமதியளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
இதையும் படிங்க: ஜஹாங்கிர்புரியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் ரம்ஜான்... இனிப்புகள் வழங்கி கொண்டாடிய இந்து, இஸ்லாமிய மக்கள்..!