நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள நீடுர் கீழத்தெருவில் நாட்டாமை பஞ்சாயத்து பதவிக்காக நாட்டாமை இளங்கோவன் தரப்பினருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கண்ணதாசன் தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததுள்ளது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி ஒருதரப்பைச் சேர்ந்த பெண்ணை, எதிர்தரப்பினர் கிண்டல் செய்ததால், இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
இதில் நாட்டாமை இளங்கோவன் மகன் இளவரசன், தங்கமணி ஆகியோர் மற்றொரு தரப்பினரால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இதில் குற்றவாளிகளான கண்ணதாசன், கஜேந்திரன், ஆனந்தகுமார், நவீன்ராஜ் உள்ளிட்ட 16 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் அனைவரும் தற்போது ஜாமினில் வெளிவந்துள்ளனர்.
ஆனால், கொலையாளிகள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோரை கிராமத்திற்குள் நுழைய விடாமல் கிராம பஞ்சாயத்தார்கள் கடந்த ஆறு மாதங்களாக தடுத்து வருகின்றனர். மேலும் வீட்டில் உள்ள பொருட்கள், நகைகள், ஆடு, மாடு உள்ளிட்டவைகளை காணவில்லை என்றும் குற்றம்சாட்டி ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் கண்மனி தலைமையில், ஏற்கனவே 8 முறை அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்க சம்மன் அனுப்பப்பட்டும், கிராம நாட்டாமைகள் தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை, நேற்றும் நாட்டாமை தரப்பினர் கூட்டத்தில் பங்கேற்காததால் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இதனால் கடந்த 6 மாதங்களாக கிராமத்திற்குள் செல்லாமல் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பரிதவித்துவருகின்றனர். மீண்டும் வருகின்ற 22ஆம் தேதி அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அக்கூட்டத்திலும் நாட்டாமை தரப்பினர் பங்கேற்கவில்லையெனில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப் போவதாக ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தொடரும் காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள், இளைய தலைமுறையினர் இடையேயான மறைமுக மோதல்!