மயிலாடுதுறை மாவட்டம் பொன்வாசநல்லூர் கிராமத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் சின்ன குளம் உள்ளது. இந்த குளத்திற்குச் செல்லும் பாதை, குளக்கரையைத் தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், இது குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டாட்சியரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இதைக் கண்டித்து கிராம மக்கள் இன்று (செப்.21) அரசு பேருந்தைச் சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து குளத்திற்குச் செல்லும் பாதையை மீட்டுத்தர வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
மேலும் இது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்ட வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர். இந்தப் போராட்டத்தினால் மயிலாடுதுறை - சேத்தூர் செல்லும் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இறுதியாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துவிட்டுக் கலைந்துசென்றனர்.