மயிலாடுதுறை: புகழ்பெற்ற 108 வைணவ திவ்ய தேசங்களில் 22ஆவது ஆலயமும், பஞ்சரங்க ஆலயங்களில் ஐந்தாவது ஆலயமுமாக திருஇந்தளூரில் ஸ்ரீ பரிமள ரெங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி விழா வரும் 13ஆம் தேதி நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு பகல்பத்து முதல்நாள் நிகழ்ச்சி இன்று (ஜனவரி 3) தொடங்கியது. பெருமாள் சர்வ அலங்காரத்தில் மகாலட்சுமி பதக்கம் மார்பில் அணிந்து மரகத கிரீடம் தாங்கி உள் பிரகார வீதி உலா எழுந்தருளினார். தொடர்ந்து திருவந்திக்காப்பு மண்டபத்திற்கு எழுந்தருளிய பெருமாளுக்குச் சிறப்பு தீபாராதனைகள் நடத்தப்பட்டன.
அதனையடுத்து படியேற்றச் சேவை நடைபெற்றது. ஆலயத்தில் ஒவ்வொரு படிக்கும் நான்கு தமிழ்ப் பாசுரங்களைப் பாடினர். ஒவ்வொரு படியாகப் பெருமாளை பல்லக்கில் தாலாட்டுவதுபோல் தாலாட்டி ஐந்து படிகள் கடந்து கர்ப்பகிரகத்தில் எழுந்தருளினார்.
தமிழ்நாட்டில் பரிமள ரெங்கநாதர் ஆலயத்தில் மட்டுமே தமிழ்ப் பாசுரங்கள் பாடி படியேற்றச் சேவை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்செய்தனர்.
இதையும் படிங்க: திமுக நிர்வாகிகள் அராஜகம்: தள்ளுவண்டிக் கடை அடித்து நொறுக்கல், ஒருவர் தற்கொலை முயற்சி