மயிலாடுதுறை ஒன்றியத்திற்குள்பட்ட மன்னம்பந்தல் ஊராட்சி மன்றத் தலைவர் இளம் பட்டதாரி பெண் பிரியா பெரியசாமி. இவர், தான் தலித் என்பதால் ஊராட்சி நிதியில் வாங்கிய சுழல் நாற்காலியில் அமரக்கூடாது என்று மாற்று சமூகத்தை சேர்ந்த ஊராட்சி துணைத் தலைவர் அமலா, அவரது கணவர் ராஜகோபால் ஆகியோர் சாதிப்பெயரைச்சொல்லி திட்டியதாக குற்றஞ்சாட்டினார். இதனால் நேற்று மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக ஊராட்சி மன்ற தலைவர் பிரியா பெரியசாமி தர்ணா போராட்டம் நடத்தினார்.
தொடர்ந்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் துணைத் தலைவர், அவரது கணவர் மீது பிரியா பெரியசாமி அளித்த புகாரின்பேரில் காவல் துறையினர் சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து மன்னம்பந்தல் ஊராட்சி துணைத் தலைவர் அமலா கூறுகையில், ''துணைத்தலைவரின் அனுமதியில்லாமல் டிவைசை பயன்படுத்தி ரூ.9 லட்சத்திற்கான நிதியை பெற்றுள்ளது குறித்து மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்ததால் ஊழலை மறைப்பதற்காக தலைவர் குடும்பத்தினர் சாதிப் பிரச்னையை தூண்டுகின்றனர்.
ஊராட்சி மன்றத் தலைவர் பிரியா அலுவலகத்திற்கே வருவதில்லை. அவருக்குப் பதிலாக அவரது தந்தை பெரியசாமி, தாய், சகோதரர்தான் ஆட்சி செய்கின்றனர்.
சுழல் நாற்காலிப் பிரச்னை நடக்கும்போது ஊராட்சி மன்றத் தலைவரே அலுவலகத்தில் இல்லை. சாலையில் விளக்குகள் எரியாமல் இருக்கும் இந்த நேரத்தில் நாற்காலிக்கு இவ்வளவு செலவு தேவையா என்றுதான் கேட்டோம். மயிலாடுதுறை காவல் துறையினர் விசாரணை செய்யாமலேயே தங்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மன்னம்பந்தல் ஊராட்சியில் முறையாக விசாரணை செய்து ஊராட்சித் துறை, காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனக் கோரிக்கைவிடுத்துள்ளார்.
இதையும் படிங்க: ஊராட்சித் தலைவரை சாதி ரீதியாக அவமானப்படுத்திய விவகாரம்: காவல் துறை வழக்குப்பதிவு!