நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸுக்கு ஆதரவாக, திமுக மகளிரணிச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, நாகூரில் இன்று பானை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார். அப்போது அங்கு கூடியிருந்த மக்களிடையே பேசிய அவர், “இனிவரும் காலங்களில் சமஸ்கிருதம் தெரிந்தால் மட்டும்தான் மருத்துவப் படிப்புகள் படிக்க முடியும் என்ற பழைய நிலையை பாஜக உருவாக்கியுள்ளது.
சாமானிய வீட்டுப் பிள்ளைகளும் மருத்துவம் படிக்க வேண்டும் என்பதற்காக மருத்துவக் கல்லூரியை உருவாக்கியவர் கலைஞர். அந்த கனவு நிறைவேறாமல் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலையை ஏற்படுத்தியுள்ளது அதிமுக அரசு. மேலும், குடியுரிமை சட்டம், வேளாண் திருத்த சட்டம் என மக்களுக்கு எதிராக பாஜக கொண்டு வரும் திட்டங்கள் அனைத்தையும் கண்ணை மூடி ஆதரிக்கிறது அதிமுக அரசு. பதவி மேல் இருக்கக் கூடிய வெறியால் பழனிசாமி தமிழகத்தை டெல்லியில் அடகு வைத்துவிட்டார்.
வெள்ளம், புயல் உள்ளிட்ட பாதிப்புகளின் போது கேட்ட தொகை எதுவும் வழங்காத மத்திய அரசுக்கு இணக்கமாக இருக்க வேண்டிய அவசியம் என்ன? பொள்ளாச்சியில் பெண்களை சீரழித்த குற்றவாளிகளை காப்பாற்ற இந்த அரசு முயற்சிக்கிறது. காரணம், குற்றவாளிகள் அனைவரும் அதிமுகவினர் என்பதால். இதுதான் அதிமுக ஆட்சியின் அராஜகம். இவர்களை இனிமேலும் விடக்கூடாது. இதனை தடுக்க திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: கண்டனத்திற்கு உள்ளான பாஜகவின் இருசக்கர வாகன பேரணி