மயிலாடுதுறை: சீர்காழி தாலுகா பழையாறு துறைமுகத்திலிருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் மூலம் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.
இவர்களுக்கு மானிய விலையில், டீசல் வழங்குவதற்காகத் துறைமுகத்தின் வளாகத்திலேயே மீன் வளர்ச்சிக் கழகத்தால் டீசல் விற்பனை நிலையம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த டீசல் விற்பனை நிலையத்தில் (மார்ச் 16) நேற்று நள்ளிரவு முதல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.15 கூடுதலாக விலை உயர்வு அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழையாறு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
டீசல் விலையேற்றம்
தனியார் விற்பனை விலையில் இருந்து 20 % மானியம் வழங்கி, மீனவர்களுக்கு டீசல் வழங்க வேண்டும் என்பது அரசின் விதி. அதன்படி, தற்போதைய தனியார் விற்பனை விலை 1 லிட்டர் டீசல், ரூ. 93.10 பைசாவாக உள்ளது. இந்நிலையில், ரூ.73.10 பைசாவிற்கு டீசல் வழங்கப்பட வேண்டும். ஆனால், மீன்வளர்ச்சி கழகத்தின் துறைமுக டீசல் விற்பனை நிலையத்தில் 27 ரூபாய் கூடுதலாக 103 ரூபாய்க்கு டீசல் விற்பனை செய்யப்படுகிறது.
மீனவர்கள் போராட்டம்
அதேபோல், மானியம் அல்லாத டீசல் 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், மீனவர்கள் கூடுதல் செலவு செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். எனவே, மீன்வளர்ச்சி கழகத்தின் விலை உயர்வைக் கண்டித்தும் 73 ரூபாய்க்கு மானிய டீசல் வழங்க வலியுறுத்தியும், பழையாறு கிராம மீனவர்கள் 5,000 பேர் (மார்ச் 17) இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
மீனவர்களின் போராட்டத்தால் 300 விசைப்படகுகள், 500 பைபர் படகுகள் மற்றும் நாட்டு படகுகள் உள்ளிட்ட 1000-க்கும் மேற்பட்ட படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: பிரிட்டிஷ் கவுன்சில் மூலம் ஆங்கிலப் பயிற்சி: இன்னசென்ட் திவ்யா