மயிலாடுதுறை: இந்த ஆண்டு காவிரியில் முன்கூட்டியே தண்ணீர் திறந்து விட்ட காரணத்தால் மயிலாடுதுறை மாவட்டத்தில் வழக்கமான பரப்பளவை விட கூடுதல் பரப்பளவாக 93 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் தொடங்கியுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மாலை தொடங்கி நள்ளிரவு வரை கனமழை பெய்து வருகிறது.
காற்றுடன் கூடிய கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் திருவிழந்தூர், மாப்படுகை, சோழம்பேட்டை, கோழிகுத்தி, பாண்டூர், தாழஞ்சேரி, ஆனந்தக்குடி உள்ளிட்ட பகுதிகளில் 8 ஆயிரம் ஏக்கருக்குமேல் அறுவடை செய்யவேண்டிய நெற்பயிர்கள் வயல்களில் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியுள்ளது. விவசாயிகள் வயல்களில் தேங்கிய தண்ணீரை வடியவைக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
தண்ணீரில் மிதக்கும் நெல்மணிகள் முளைக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு மயிலாடுதுறை சுற்றுவட்டாரப்பகுதிகளில் 2 மணிநேரத்தில் 4 சென்டிமீட்டர் கனமழை கொட்டிதீர்த்ததால் பல்வேறு இடங்களில் பயிர்கள் மீண்டும் தண்ணீரில் மூழ்கியது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
மாப்படுகை கிராமத்தில் 100 ஏக்கருக்குமேல் தண்ணீரில் மூழ்கியுள்ள பயிர்கள் முளைக்க தொடங்கிவிட்டது. இதனை மயிலாடுதுறை வேளாண்துறை வட்டார அதிகாரி சுப்பையன் நேரிடையாக வந்து ஆய்வு மேற்கொண்டார். அறுவடை செய்யமுடியாத காரணத்தால் அறுவடை இயந்திரங்கள் வயல்களிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவிக்காததால் கவலையில் ஆழ்ந்துள்ள விவசாயிகள் உடனடியாக பயிர் சேதங்களை கணக்கிட்டு உரிய நிவாரணம் பெற்றுத்தர வேண்டும் என்று அதிகாரியிடம் கோரிக்கை விடுத்தனர். அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை அனைத்து பகுதிகளிலும் திறந்து ஈரப்பதத்தை கணக்கில் கொள்ளாமல் கொள்முதல் செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: த்ரிஷ்யம் 3ஆம் பாகம் எடுப்பது உறுதி... தயாரிப்பாளர் ஆண்டனி