சென்னை: சீர்காழியை அடுத்த கீழ்மூவக்கரை மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த ஜெயக்குமார், அவரது சகோதரர்கள் ஆறு பேர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு வெண்கல நிலப்படியை காணிக்கையாக அளித்துள்ளனர். அதில் உபயதாரர்கள் எனத் தங்களது பெயர்களைப் பொறித்துள்ளனர்.
இந்நிலையில் மூன்று மாதங்களுக்கு முன் கீழ்மூவக்கரை கிராம பொறுப்பாளர்கள் ஜெயக்குமார், அவரது சகோதரர்கள் ஆறு பேரின் குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்தனர். இதனால் அவர்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இது குறித்து கிராமத்தினரிடம் முறையிட்டும் அவர்கள் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கப்படாததால், சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்டவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
பின்னர் தங்கள் மீதுள்ள தடையை நீக்கக் கோரியும், கோயில் திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதிக்கக் கோரியும் வட்டாட்சியரிடம் அவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக நாளிதழில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மாநில மனித உரிமைகள் ஆணையம் தலைவர் பாஸ்கரன், இது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஆறு வாரங்களில் அறிக்கைத் தாக்கல்செய்ய உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'போலி'கள் இனி காலி - புதிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்