நாகை மாவட்டம் குத்தாலத்தில் கடந்த இரண்டு மாதங்களாக ஓஎன்ஜிசி நிறுவனம் புதிதாக எண்ணெய் கிணறு தோண்டும் பணியை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் ஈடிவி பாரத் ஊடகத்திடம் பேசுகையில், ” 2017இல் 110 கிணறுகளை அமைப்பதற்கு ஓஎன்ஜிசி நிறுவனம் அனுமதி கேட்டதில் குத்தாலம், பந்தநல்லூர், காளி, மாதானம் ஆகிய ஊர்களுக்கு தமிழ்நாடு அரசும், சுற்றுச்சூழல் துறையும் அனுமதி வழங்கவில்லை. 2020 பிப்ரவரி மாதம் காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அரசு அறிவித்ததோடு, ஷேல், மீத்தேன் எரிவாயு எடுக்க அனுமதி கிடையாது என்றும் தெரிவித்தது.
இந்த அறிவிப்பில் எண்ணெய் எடுத்துவரும் பணி தொடரும் என்றும், திட்டம் போட்டு விண்ணப்பம் கிடப்பில் இருந்தால் அந்தத் திட்டத்தை தொடர அனுமதி கிடையாது என்றும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாடு அரசின் உத்தரவை ஓஎன்ஜிசி துளிகூட மதிக்கவில்லை. இதுபோன்ற அத்துமீறலை தடுக்க போராட்டம் நடத்திய 14 பேர் மீது வழக்கு போட்டுள்ளனர்.
குத்தாலத்தில் எண்ணெய் கிணறு அமைப்பதை நிறுத்தக்கோரி கோட்டாட்சியரிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. இதைத்தடுக்க பொதுமக்கள் கொதித்தெழுந்து போகத்தான் செய்வார்கள். அப்படி போனால் அலுவலர்கள்தான் அதற்கு பொறுப்பு. கரோனா முடக்கிப்போட்டுள்ள இந்த நேரத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் அத்துமீறலை தடுக்காத, தமிழ்நாடு அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம் ” என்றார்.
இதையும் படிங்க: விவசாய நிலத்தில் கொட்டப்பட்ட சாயக் கழிவுகள் - அலுவலர்கள் விசாரணை!