நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மாப்படுகை பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜ் (36). இவர் மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மல்லியம் என்ற இடத்தில் கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை நோக்கி அதிவேகமாக வந்த டாரஸ் லாரி முன்னால் சென்ற லாரியை முந்தி சென்றபோது ஓட்டுநர் வேகத்தடை இருந்ததை கவனிக்காததால் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிரே வந்த ராஜ் மீது மோதி அருகிலிருந்த வாய்க்காலில் கவிழ்ந்தது.
இதில், இருசக்கர வாகனத்தில் வந்த ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, குத்தாலம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், கும்பகோணம் சோழன்மலிகை கீழே தெருவை சேர்ந்த லாரி ஓட்டுநர் ஜெயராஜ் (36) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.