தென்மேற்கு பருவக்காற்று, வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டில் 48 மணி நேரத்திற்குள் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நேற்று (09/06/20) அரியலூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. அதன்படி அரியலூரில் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலையில் ஜெயங்கொண்டம் ஆண்டிமடம், தா.பழூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
பின்னர் நாகை பேருந்து நிலையம், துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசியதால், காற்றின் வேகத்திற்கு மரங்கள் வேரோடு ஆடின. அதனைத் தொடர்ந்து பலத்த சூறைக்காற்றுடன் இடி, மின்னலுடன் நாகை, நாகூர், வேளாங்கண்ணி, கீழ்வேளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
இதேபோல் காரைக்கால், அம்பகரத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் ஒரு மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. அம்மாவட்டங்களில் பெய்த மழையால், குறுவை சாகுபடிக்கு தயாராகிக் கொண்டிருக்கும் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: குமரியில் சாலை பள்ளங்களை நிரம்பி வழிய செய்த பருவமழை!