மயிலாடுதுறை: திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (நவ. 27) மக்கள் குறைதீர்க்கும் முகாம் ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்றது.
அப்பொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலக வெளி வளாகத்தில் சரியாக நடக்க முடியாத நிலமையில் இருந்த 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரை கைத்தாங்கலாக அவரது மனைவி பிடித்து மெல்ல மெல்ல அழைத்து வந்து கொண்டிருந்தார். ஒரு கையில் கணவர், மறுகையில் நடப்பதற்கு உதவும் ஊன்றுகோல் மற்றும் மனுவுடன் அவர்கள் நடக்க முடியாமல் நடந்து வந்த காட்சி பரிதாபத்தை ஏற்படுத்தியது.
இதனை பார்த்தவர்கள், அவர்களை கைத்தாங்கலாக மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்குக்குள் மனு கொடுக்கும் இடத்திற்கு அழைத்து வந்து கொண்டிருந்தனர். அப்போது வெளியே வந்த மாவட்ட ஆட்சியரை கண்ட மூதாட்டி திடிரென காலில் விழுந்து கதறினார். அவர்கள் திருச்சிற்றம்பலம் பகுதியைச் சேர்ந்த சின்னையன், கனியம்மாள் என்பதும் கடந்த சில மாதங்களாக தனது கணவருக்கு முதியோர் உதவித் தொகையை வராமல் நிறுத்தி வைக்கப்பட்டதும், முதியோர் உதவித் தொகை பெற்று தர மனு அளிக்க வந்ததும் தெரிய வந்தது.
மேலும், இவர்களது இரண்டு மகன்களில் ஒருவர் உயிரிழந்து விட, தாங்கள் இருவர் மட்டும் தனியாக முதியோர் உதவித் தொகையை மட்டும் வைத்து வாழ்ந்து வருவதாகவும், முதியோர் உதவித் தொகையை வரவில்லை என்று கிராமத்தில் பணம் கொடுக்கும் பெண்ணிடம் கேட்டால் வங்கியை சென்று கேட்குமாறு சொன்னதாகவும் கூறினார்கள்.
அவர் கூறியதை அடுத்து வங்கிக்கு சென்று கேட்ட போது அதிகாரிகளை பாருங்கள் என்று கூறினார்கள். அதிகாரிகளிடம் சென்றால் அவர்கள் போஸ்ட் ஆபீஸ் செல்ல வேண்டும் என்று அலைக்கழிப்பதாக கூறி கதறினார். இதனை அடுத்து தனி வட்டாட்சியரை அழைத்து உடனடியாக முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும் என்று சம்பவ இடத்திலேயே மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மனு கொடுத்து தீர்வு கிட்டும் என்ற மன நிம்மதியில் முதிய தம்பதிகள் தள்ளாடியபடி நடந்து சென்றனர்.