கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 24ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து அனைத்து கடைகளும் மூடப்பட்டன. காய்கறி, மளிகை, மருந்து, பழக்கடைகள், பெட்ரோல் பங்குகள் போன்ற அத்தியாவசிய பொருள்கள் கிடைக்கும் கடைகள் மட்டும் நேர விதிப்படி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
சமூக விலகல் கடைபிடிக்கும் வகையில் பொருள்கள் விற்பனை செய்வதற்கு வியாபாரிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் அறிவுரை வழங்கியுள்ளன. இந்நிலையில், மயிலாடுதுறை கச்சேரி சாலையில் தனியார் இனிப்பகத்தின் பெயர் பொறிக்கப்பட்ட உணவு தின்பண்டங்கள் சாலையோரம் ஒருவர் விற்பனை செய்துள்ளார்.
காலாவதியான உணவு தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து நகராட்சி ஆணையர் புவனேஸ்வரன், சுகாதார அலுவலர் டாக்டர் கிருஷ்ணகுமார் மற்றும் அலுவலர்கள் கச்சேரிசாலை பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பூட்டியிருந்த கடைகளுக்கிடையே சிறிய சந்தில் காலாவதியான உணவு தின்பண்டங்கள் விற்பனை செய்வதை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் காலாவதியான உணவு திண்பண்டங்கள் விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் புவனேஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் 102 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று - அமைச்சர் வெளியிட்ட ட்வீட்டில் தகவல்!