நாகை அரசு மருத்துவமனையில் அரசு செவிலியர் பயிற்சி பள்ளி இயங்கி வருகிறது. இங்குள்ள பயிற்சி பள்ளி விடுதியில் விருதுநகர், திருச்சி, தஞ்சை, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் வழக்கம்போல் பயிற்சிக்கு புறப்பட்ட மாணவிகள் அனைவரும், இன்று காலை உணவு சாப்பிட்டனர். அப்போது சட்னியில் பல்லி இறந்து கிடந்ததை தெரியாமல் சாப்பிட்ட மாணவிகள் பலருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
இதனையடுத்து, அங்கு மயக்கமுற்ற 15 செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகளை, சக மாணவிகள் உடனடியாக அரசு மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவிகள் 15 பேருக்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதனிடையே நாகையில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட மாணவிகள் 15 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.