சென்னை: நீட் தேர்வு ரத்து, கலைஞர் நாணயம் வெளியீடு, சட்டப்பேரவை நேரலையில் அதிமுக உறுப்பினர்களை காட்டாமல் இருப்பது உள்ளிட்டவை குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் இடையே சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடந்ததால் பரபரப்பு நிலவியது.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து செய்வதாக அறிவித்தீர்கள். நான்கு ஆண்டு காலங்கள் கடந்தும் அதற்கான நடவடிக்கை இல்லை. நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படுமா?
முதல்வர் ஸ்டாலின்: இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நிச்சயமாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.
எடப்பாடி பழனிசாமி: நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என நீங்கள் (திமுக) மக்களை ஏமாற்றுகின்றனர். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும் வாய்ப்பு குறைந்துவிட்டது. நாங்கள் பாஜக கூட்டணியுடன் இருந்தோம், இப்போது விலகி விட்டோம். ஆனால், நீங்கள் காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்துக் கொண்டு பாஜக தலைவர்களை வைத்து கலைஞர் நாணயம் வெளியிட்டுள்ளீர்கள். ஏன் இரட்டை வேடம் போடுகிறீர்கள்?
முதல்வர் ஸ்டாலின்: நாங்கள் இரட்டை வேடம் போடுகிறோம் என்றால் நீங்கள் நான்கு வேடம் போடுகிறீர்கள்.
எடப்பாடி பழனிசாமி: பதில் சொல்ல முடியாததால் இப்படி பேசுகிறீர்கள். கலைஞர் நாணயம் வெளியீடு அரசு நிகழ்ச்சியாக இருந்தால் பரவாயில்லை. கட்சி நிகழ்ச்சிக்கு ஏன் பாஜகவை அழைத்தீர்கள்?
முதல்வர் ஸ்டாலின்: அந்த நிகழ்ச்சி அரசு நிகழ்ச்சி தான்.
எடப்பாடி பழனிசாமி: பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது கள்ளக்கூட்டணி என ஏன் கூறுகிறீர்கள்?
அப்பாவு: வெளியில் பேசும் போது எதை வேண்டுமானால் பேசலாம், சபையில் யாரும் பேசவில்லை.
எடப்பாடி பழனிசாமி: அதிமுக எதுவாக இருந்தாலும் தைரியமாக பேசும். தமிழ் பெருமைகளை தவிர்த்து, பெரியார், அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்டோர் பெயர்களை தவிர்த்து ஆளுநர் கடந்த காலங்களில் வாசித்தார். அப்போதெல்லாம் ஏன் திமுக போராட்டம் நடத்தவில்லை? எதை திசை திருப்ப இப்படி போராட்டத்தை நடத்துகிறீர்கள்? எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தினால் வழக்கு பதிவு செய்கிறீர்கள், கைது செய்கிறீர்கள், ஆளும் கட்சிக்கு ஒரு நீதி, எதிர் கட்சிக்கு ஒரு நீதியா?
முதல்வர் ஸ்டாலின்: இப்போது எதுவும் படிக்காமல் சென்றதால் தான் ஆளுநரை கண்டித்து போராட்டம் நடத்தினோம். ஆளும் கட்சி அனுமதிக்கப்பட்ட இடத்தில் போராட்டம் நடத்துகிறது. அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தினால் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் தான் போராட்டம் நடத்த அனுமதிக்கப்படுகிறது.
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவை நேரலையில் அதிமுக உறுப்பினர்களை இரு நாட்களாக காட்டவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்தை கூட நேரலையில் காட்டவில்லை.. தமிழ் தாய் வாழ்த்துக்கு அவ்வளவு தான் மதிப்பா? என கேள்வி எழுப்பினார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, அப்படி காட்ட வேண்டுமானால் நீங்கள் ஆளுநருக்கு எதிராக பதாகை காட்டியதையும் காட்ட வேண்டி இருக்கும் என்றார்.