சென்னை: பெரம்பூரில் உள்ள இணைப்புப் பெட்டித் தொழிற்சாலையில் ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று ஆய்வு மேற்கொண்டார். புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள அம்ரித் பாரத் ரயிலின் மேம்படுத்தப்பட்ட சிறப்பம்சங்களை பார்வையிட்ட அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஒவ்வொரு பெட்டியாக ஆய்வு மேற்கொண்டார்.
படுக்கைகள், மற்றும் இருக்கைகளில் ஏறியும், மின் விளக்குகள், பவர் சாக்கெட்டுகள் மற்றும் கழிவறைகள் என அனைத்தையும் அமைச்சர் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது ரயிலின் வேலைகள் சிறப்பாக நடந்து வருவதாகக் கூறிய அவர், ரயில் திட்ட விரிவாக்கங்களுக்காக இடங்களை கையகப்படுத்தும் போது மாநில அரசுகள் உறுதுணையாக இருக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.
ரயில் திட்டங்கள்
மேலும், தூத்துக்குடியில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக மதுரைக்கு புதிதாக ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இத்திட்டத்தை வேண்டாம் எனக் கூறி தமிழக அரசிடம் இருந்து எழுத்துபூர்வமான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதன் காரணத்தால் இத்திட்டத்தை மத்திய அரசு முழுமையாக கைவிட்டது என்றார்.
தமிழ்நாட்டிற்கு ரயில் திட்டங்கள் அடுத்தடுத்து என்னென்ன உள்ளன என கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு நல்ல ரயில்வே திட்டங்களை வழங்குவதில் உறுதி பூண்டுள்ளார் எனவும், தமிழ்நாட்டில் இடம் கையகப்படுத்துவது குறித்து தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
அடுத்ததாக பாம்பன் பாலம் குறித்து பேசிய அமைச்சர், பாலத்தில் பணிகள் நிறைவு செய்யபட்டு விட்டன. வெகு விரைவில் ராமேஸ்வரத்திற்கு ரயில் பயணம் தொடரும் எனக் கூறினார். மேலும், ஆர்.டி.எஸ்.ஓ ஸ்டாண்டேர்டு (RDSO Standard) டிசைன் தரச் சான்று பெற்று விட்டதாகவும், பாம்பன் பாலம் ஒரு தனித்துவ மாடல் எனவும், இது பொதுவான ரயில் பாலம் அல்ல என்றும், சர்வதேச வல்லுனர்கள் கொண்டு வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ரயில் பாலம் எனவும் பேசினார்.
அம்ரித் பாரத் ரயில்
தொடர்ந்து பேசிய அமைச்சர், அம்ரித் பாரத் ரயிலின் மேம்படுத்தப்பட்ட மாதிரியை (புரோட்டோட்-டைப் மாடல்) பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. இந்த ரயிலில் 12 மேம்படுத்தப்பட்ட சிறப்பம்சங்கள் அடங்கியுள்ளன. தரம் உயர்த்தப்பட்ட கழிவறை, சேர் பில்லர்ஸ், அவசர கால அழைப்பு, பேண்ட்ரி கார் (உணவு சமைக்கும் இடம்), எல்.இ.டி விளக்குகள், சார்ஜிங் சாக்கெட்ஸ், மொபைல் ஹோல்டர்ஸ் என அனைத்துமே, நடுத்தர வர்க மக்கள் பயன்படுத்தும் வகையில், நீண்ட தூர பயணத்திற்காக தயார் செய்யபட்டுள்ளது என பேசினார்.
மேலும், ஏற்கனவே அம்ரித் பாரத் ரயிலின் முந்தைய மாடல் பெங்களூருவில் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்தார். இப்போது 12 விதமான அம்சங்களுடன் அம்ரித் பாரத் 2.0 ரயில் தயாராகி உள்ளது. இன்று முதல் இது பயன்பாட்டில் வரும் என பேசிய அவர் ஜம்மூ, காஷ்மீர் இடையேயான ரயில் போக்குவரத்து குறித்து பேசினார்.
ஐ.சி.எஃப் நல்லா இருக்கு
அப்போது, ஜம்மு - ஶ்ரீநகர் இணைக்கும் ரயில் பயணம் இந்திய ரயில்வேயின் கனவு. 97 கிலோ மீட்டர் சுரங்கப் பாதை, 6 கிலோ மீட்டர் பாலத்தை உள்ளடக்கிய ரயில் பாதையாக அது வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகளும் முடிவடைந்துள்ளது. கூடிய விரைவில் அவை பயன்பாட்டில் வரும் என பேசினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், ரயில் பெட்டி இணைப்புத் தொழிற்சாலைக்கு - ஐ.சி.எஃப் (Integral Coach Factory - ICF) அடிக்கடி வருவது எனக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக, "ஐ.சி.எஃப் நல்லா இருக்கு, ரொம்ப நல்லா இருக்கு, ரொம்ப நல்ல இந்நோவேஷன்" என தமிழில் கூறினார்.
Hon'ble Union Minister for railways Shri Ashwini Vaishnaw, visited the ICF #Chennai today & carried out a detailed inspection of Amrit Bharat rake, Vistadome coaches & other facilities.
— Southern Railway (@GMSRailway) January 10, 2025
The Minister was accompanied by ICF GM Shri U. Subba Rao & #SouthernRailway officials. pic.twitter.com/YUBcl9Ywvr
அடுத்ததாக வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் படுக்கை குறித்த விமர்சனத்திற்கு பதில் அளித்த அமைச்சர், ஸ்லீப்பர் ரயிலில், ஸ்லீப்பரில் உள்ள குறைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன என்று கூறினார்.
தொடர்ந்து அமைச்சரிடம் இந்த வருட ரயில்வே பட்ஜெட் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, நடப்பு நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட ரயில்வே பட்ஜெட் நிதியில் 76 விழுக்காடு பயன்படுத்தப்பட்டு விட்டது. வரும் பட்ஜெட்டில் ரயில்வே சம்பந்தமான அறிவிப்புகளுக்கு காத்திருங்கள் என்று கூறி தனது பேட்டியை நிறைவு செய்தார்.