நாகப்பட்டினம்: தமிழகத்தில் தக்காளி, சின்ன வெங்காயம் ஆகியவற்றின் விலை வரலாறு காணாத அளவுக்கு விலையேற்றத்தை சந்தித்துள்ளது. இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு அங்காடிகளில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விற்பனை செய்யப்படும் என அண்மையில் தமிழக அரசு அறிவித்தது.
அந்த வகையில் மயிலாடுதுறையில் உள்ள நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் தக்காளி விற்பனையை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேற்று தொடக்கி வைத்தார். மற்ற சந்தையில் 110 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு கிலோ தக்காளி 80 ரூபாய் என்றும், 170 ரூபாய்க்கு விற்கப்படும் சின்ன வெங்காயம் 150 ரூபாய் என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
தக்காளி, சின்ன வெங்காயம் ஆகியவை வெளிச்சந்தைகளில் விற்கப்படும் விலையை விட குறைவான விலைக்கு கிடைப்பதால் பொதுமக்கள் அதனை மகிழ்ச்சியுடன் பெற்றுச்சென்றனர். இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏக்கள் ராஜகுமார், நிவேதா முருகன், பன்னீர்செல்வம் மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் தக்காளி வரத்து குறைவடைந்த காரணத்தினால், ஒரு கிலோ தக்காளி 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே போல சின்ன வெங்காயமும் அதீத விலை ஏற்றத்தை சந்தித்துள்ளது. இதனையடுத்து மயிலாடுதுறை நாராயண பிள்ளை சாலையில் அமைந்துள்ள நுகர்வோர் கூட்டுறவு மொத்த பண்டகசாலையில், நேற்று கூட்டுறவுத் துறையின் சார்பில் குறைந்த விலைக்கு தக்காளி, சின்ன வெங்காயம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
மேலும் இந்த கடையில், இஞ்சி, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் ஆகியவற்றின் விற்பனையும் நேற்று (ஜூலை 11) தொடங்கியது. இத்திட்டத்தை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தொடக்கி வைத்தார். குறைந்த விலைக்கு தக்காளி, சின்ன வெங்காயம் விற்பனை செய்யப்படுவது குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை நகரவாசிகள் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தவர்களும் கூட்டுறவு பண்டக சாலையில் காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.
ஆனால், இன்று காலை முதல் தக்காளி, சின்ன வெங்காயம் ஆகியவை இருப்பில் இல்லாததால், கடை ஊழியர்கள் பொது மக்களிடம் இருப்பு இல்லை எனக் கூறி பொதுமக்களை திருப்பி அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இஞ்சி, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் உள்ளிட்ட எந்த பொருளும் இருப்பில் இல்லை என்றும் கூறியுள்ளனர்.
ஒருகட்டத்தில் பொதுமக்களுக்கு பதில் சொல்ல முடியாத ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு வெளியேறியுள்ளனர். திட்டம் தொடங்கிய மறுநாளே தக்காளி, சின்ன வெங்காயம் ஆகியன குறைந்த விலைக்கு கிடைக்காததாலும், கடை பூட்டப்பட்டு இருந்ததாலும் பொதுமக்கள் பலர் ஏமாற்றத்துடன் வீடுகளுக்குத் திரும்பிச்சென்றனர்.
இது குறித்து அத்துறையின் அதிகாரிகளிடம் கேட்டபோது, தற்போது காய்கனிகள் இருப்பில் இல்லாததால் கடை மூடப்பட்டுள்ளதாகவும், இன்று மாலை பொருள்கள் வந்தவுடன் மீண்டும் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தக்காளிக்கு தீர்வு கிடைச்சாச்சு... மத்திய அரசு புதிய திட்டம்! என்ன தெரியுமா?