நிவர் புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில் உள்ள 10 மீனவ கிராமங்கள் உள்பட 28 கிராமங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் நாளை (நவம்பர் 25) கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் புயல் காற்று மணிக்கு 100 கிலோ மீட்டர் முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் தரங்கம்பாடி தாலுக்காவில் உள்ள கடலோர மீனவ கிராமமான தரங்கம்பாடி, சந்திரபாடி, சின்னூர்பேட்டை, குட்டியாண்டியூர், வெள்ளக்கோயில், பெருமாள்பேட்டை, புதுப்பேட்டை, தாழம் பேட்டை, சின்னகுடி, சின்னமேடு ஆகிய மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள், 1500க்கும் மேற்பட்ட பைபர் படகுகள், வலைகள், இன்ஜின்கள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை கரை பகுதியில் பாதுகாப்பாக வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தரங்கம்பாடி கடலோர காவல் நிலைய காவலர்கள் கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு, மீனவர்களுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர். அதேபோல் தரங்கம்பாடி தாலுக்காவிற்கு நியமிக்கப்பட்டுள்ள நாகை புயல் பாதுகாப்பு மண்டல சிறப்பு அலுவலரும், உதவி ஆட்சியருமான சகிதா பர்வின் தலைமையில் தரங்கம்பாடி தாசில்தார் கோமதி உள்ளிட்ட அலுவலர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
தரங்கம்பாடி, மாணிக்கப் பங்கு, சந்திர பாடி, சின்னங்குடி உள்ளிட்ட 5 மீனவ கிராமங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக புயல் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் வசிக்கம் பொதுமக்கள் தங்குவதற்கு 40 இடங்கில் பள்ளிக் கூடங்கள், திருமண மண்டபங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க:நிவர் புயல்: மயிலாடுதுறைக்கு பேரிடர் மீட்புக் குழுவினர் வருகை