தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் டெல்டா மாவட்டங்களில், கடைமடைப் பகுதியான நாகை மாவட்டத்தில் கடந்த எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, இந்தாண்டு ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில், சம்பா சாகுபடி பணிகள் நடைபெற்றுவருகின்றன. மேட்டூர் அணை தண்ணீர் போதிய அளவு வந்து கொண்டிருக்கும் நிலையில், அவ்வப்போது இயற்கை அளிக்கும் மழைப்பொழிவு விவசாயிகளுக்குக் கைகொடுத்து வருகிறது.
குறுவை சாகுபடி பொய்த்துப்போன நிலையில், தற்போது அதிக அளவில் சம்பா சாகுபடி பணிகளை விவசாயிகள் ஆர்வத்துடன் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே விஞ்ஞானம் அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியடையும் சூழலில், அது விவசாயத்தையும் விட்டு வைக்கவில்லை என்றால் அது மிகையாகாது.
விவசாயத்தில் நாளுக்கு நாள் புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகிவரும் காலகட்டத்தில், மாடுகட்டி ஏர் உழுத காலங்கள் கடந்தோடி, டிராக்டர் உழவு பயன்படுத்தி, படிப்படியாக அதிநவீன நடவு இயந்திரம், விதை தெளிக்கும் இயந்திரம், அறுவடை இயந்திரம் என பல்வேறு இயந்திரங்களை விவசாயத்துக்கும் அறிமுகமாகிவருகிறது.
சாதாரணமாக ஒரு ஏக்கருக்குக் கைத்தெளிப்பான் மூலம் மருந்து தெளிக்க வேண்டும் என்றால் ஒரு நாளாகும். ஆனால், அதிநவீன இலகு ரக வானூர்தி தெளிப்பான் மூலம் ஐந்து முதல் ஏழு நிமிடங்களில் ஒரு ஏக்கருக்குப் பூச்சி மருந்துகளைத் தெளிக்க முடியும் என்கின்றனர் விவசாயிகள். பயிர்களுக்கு ஒரே சீராக மேலோட்டமாக தெளிக்கப்படும் களைக்கொல்லி மருந்துகள், பூமியின் அடி வரை செல்லாததால் நிலம் நச்சுத்தன்மை அடையாது என்று கூறும் விவசாயிகள், இதனால் இயற்கை வளம் பாதுகாக்கப்படும் என்றும் விவசாயிகள் கைத்தெளிப்பான் மூலம் மருந்து தெளிப்பதைவிட இவ்வகை கருவியைப் பயன்படுத்தினால் ஐந்தில் ஒரு பங்கு களைக்கொல்லி மருந்து மட்டுமே தேவைப்படும் எனவும் விவரம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர்.
இதனால் மருத்திற்கான செலவு மிச்சப்படுவது மட்டுமின்றி, ஆள் பற்றாக்குறையால் சிக்கித்தவிக்கும் விவசாயிகள் இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தி ஒரு மணி நேரத்தில் தங்களது களைக்கொல்லி மருந்துகளையும், பூச்சி மருந்துகளையும் அடிக்க முடியுமெனவும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.