மயிலாடுதுறையில் திராவிடர் விடுதலைக் கழகத்தினர் இன்று புதிய தேசிய கல்விக்கொள்கை வரைவு நகலை கிழித்தெறியும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக காவல் துறையினரிடம் அனுமதி கேட்டுள்ளனர்.
இதற்கு காவலர்கள் அனுமதியளிக்கவில்லை. இதனையடுத்து திராவிடர் விடுதலைக் கழகம், தமிழர் உரிமை இயக்கம், மக்கள் அரசு கட்சி, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பகுதியிலிருந்து கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு கிட்டப்பா அங்காடி நோக்கிச் சென்றனர்.
அவர்களை காவலர்கள் தடுத்தாலும், போராட்டக்காரர்கள் புதிய தேசிய கல்விக் கொள்கையின் வரைவு நகலை கிழித்து எறிந்தனர்.
இதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 16 பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர். இதுகுறித்து தமிழர் உரிமை இயக்கத்தைச் சேர்ந்த சுப்பு மகேஸ் தெரிவிக்கையில், "மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையானது குலக்கல்வி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகவும், சமூகநீதியை நிலைநாட்டக்கூடிய கல்வி உரிமையை பறிக்கும் வகையிலும் இருப்பதால் இந்தப் புதிய கல்விக்கொள்கையின் வரைவு நகலை கிழித்தெறியும் போராட்டத்தில் ஈடுபட்டோம்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னையில் பிரபல ரவுடி பினு மீண்டும் கைது!