நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் இயங்கிவரும் தமிழ்நாடு டாக்டர் ஜெ .ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் மீன்வளத் துறை குறித்து பல்வேறு பாடப்பிரிவுகள் செயல்பட்டுவருகின்றன.
இந்நிலையில், இந்த ஆண்டு பல்கலைக்கழகத்தில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் (பி.டெக்.) பாடப்பிரிவினை தமிழ்நாடு மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தனர்.
பின்னர் மாணவ, மாணவிகளுக்கு அனுமதி கடிதங்களை வழங்கினர். அப்போது மாணவர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், இந்தப் புதிய பாடத்திட்டம் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்களுக்கான தன்னம்பிக்கையை முழுவதுமாக வளர்த்துக் கொள்ள வேண்டும். காலம் கடந்து சென்றால் திரும்ப வராது. எனவே அதனை வீணடிக்காமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் வேலைவாய்ப்புகள் அதிகளவில் கிடைக்கும் என அறிவுரை வழங்கினார்.