இந்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ் விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை NH-45a நான்கு வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு, அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
இப்பணியில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள தலைச்சங்காடு கிராமத்தில் 150 குடியிருப்புகள், 40 ஏக்கர் விவசாய நிலங்கள், பள்ளிக்கூடம், குளம் உள்ளிட்டவற்றை கையகப்படுத்துவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.
இந்நிலையில் நாகை மாவட்ட ஆட்சியரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இன்று (அக்.22) அங்கு மீண்டும் சாலை விரிவாக்கப் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்த கிராம மக்களிடமிருந்து நில ஆவணங்களை பெறும் பணி தொடங்கியது. கையகப்படுத்தப்படும் வீடு, நிலம் ஆகியவற்றிற்கு அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இழப்பீட்டு தொகையை வழங்க அரசு சம்மதித்ததை தொடர்ந்து கிராம மக்கள் தங்கள் நிலங்களை அரசுக்கு வழங்க ஒப்புதல் தெரிவித்தனர்.
இதையடுத்து இன்று அக்கிராமத்துக்கு வந்த மாவட்ட வருவாய் அலுவலர் முகமது ஆரிப்பிடம், கிராம மக்கள் தங்கள் நில ஆவணங்களை ஒப்படைத்தனர். இதுகுறித்து முகமது ஆரிப் கூறுகையில் ‘இந்த மாத இறுதியில் நில உடைமைதாரர்களின் நில ஆவணங்கள் அனைத்தும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு அனுப்பப்பட உள்ளது. நில உரிமையாளர்களுக்கு உரிய தொகை வழங்கப்பட்ட பின்னர், இரண்டு மாதங்களில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:தீபாவளி சிறப்பு பேருந்துகள் முன்பதிவில் சுணக்கம்!