நாகப்பட்டினம்: இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக அயராது பாடுபட்டு உயிர்த் தியாகம் செய்த தியாகிகளையும்⸴ நம் நாட்டின் தேசியக் கொடியையும் போற்றி பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு இந்தியர்களின் தலையாய கடமை ஆகும். அந்த வகையில், சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் தேசியக் கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்படுகிறது. மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் தேசியக்கொடி காலையில் ஏற்றப்பட்டு, மாலை கொடி இறக்கப்படும் என்பது குறிப்பிடத்தகது.
இத்தகைய சூழலில், நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பில் 100 அடி உயரம் கொண்ட கம்பத்தில் 20 அடி உயரமும், 30 அடி நீளமும் உள்ள தேசியக் கொடியை கடந்த ஜனவரி 26ஆம் தேதி அப்போதைய மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் மூலம் ஏற்றி வைக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் ஈரோடு மற்றும் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்தான் 100 அடி உயரமுள்ள கொடிக்கம்பம் வைக்கப்பட்டது. இதில் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள 100 அடி கொடிக்கம்பத்தில்தான் முதலில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
இப்படி 100 அடி கொடிக் கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்ட முதல் மாவட்டமாக நாகை மாவட்டம் உள்ள நிலையில், தற்போது அந்த தேசியக்கொடி சேதமடைந்து உள்ளது. எனவே, நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்திருக்கும் 100 அடி உயரம் கொண்ட கொடிக்கம்பத்தில் சேதமடைந்த நிலையில் இருக்கும் தேசியக்கொடியை மாற்றிவிட்டு, புதிய தேசியக்கொடியை ஏற்ற மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்து உள்ளது.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் தாய் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்தி வைப்பு!