மத வழிபாட்டுத் தலங்கள் திறக்க தமிழ்நாடு முதலமைச்சர் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து நேற்று (செப்டம்பர் 1) நாகூர் தர்கா திறக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், சில காரணங்களால் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. இதனால் நேற்று தர்காவிற்கு வந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஐந்து மாதங்களாக மூடப்பட்டு இருந்த நாகூர் தர்கா பக்தர்களின் தரிசனத்திற்காக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இன்று (செப்.2) திறக்கப்பட்டது. முகக் கவசம் அணிந்து வருபவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டு, தெர்மல் கருவிகொண்டு பரிசோதனை செய்யப்படுகின்றனர்.
பெரிய ஆண்டவர் சன்னதி, சின்ன ஆண்டவர் சன்னதி, சின்ன ஆண்டவர் மனைவி சுல்தான் பீவி ஆகிய மூன்று சன்னதிகள் திறக்கப்பட்டு பக்தர்கள் சமூக இடைவெளி பின்பற்றி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும், மயில் ரேகை ஆசிர்வாதம், பெரிய ஆண்டவர் பாதப்பெட்டி தரிசனம் உள்ளிட்ட வழிபாடுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தர்கா வந்த பக்தர்கள் ஐந்து நிமிடங்களில் தரிசனம் செய்துவிட்டு வெளியே வரவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து மாதங்களுக்குப் பிறகு நாகூர் தர்கா திறக்கப்பட்டு இருப்பதால், காலையில் தரிசனம் செய்தது மன நிம்மதியை கொடுப்பதாக இஸ்லாமியர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.