நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் மீனவ கிராமமான கீச்சாங்கும்மத்தில் உள்ள கன்னிக்கோயில் மாசிமகத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. பிப்ரவரி 13ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் கன்னிக்கோயில் திருவிழா தொடங்கியது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கடலில் தீச்சட்டி விடும் வழிபாடு நேற்று (பிப். 17) நடைபெற்றது.
அப்போது, பம்பை மேளம் முழக்கத்திற்கு ஏற்றவாறு பெண் பக்தர்கள் சாமி வந்து ஆடினர். சாமி வந்து ஆடிய பெண் பக்தர்களின் கைகளில் பூசாரி ஆக்ரோஷத்துடன் சாட்டையடி கொடுத்தார். தொடர்ந்து ஒவ்வொரு பெண் பக்தர்களும் வரிசையில் நின்று பூசாரியின் சாட்டையடிக்கு ஏற்றவாறு ஆக்ரோஷத்துடன் மெய்மறந்து சாமி ஆடினர்.
பின்னர், கன்னிக்கோயிலில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த பிரம்மாண்ட தீச்சட்டியை மீனவர்கள் கைகளில் ஏந்தியவாறு கடற்கரை பகுதிக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர். மேளதாளம் முழங்க படகில் எடுத்துச் செல்லப்பட்ட பிரம்மாண்ட தீச்சட்டிகளை நடுக்கடலில் விட்டு மீனவர்கள் நேர்த்திகடன் நிறைவேற்றிக் கொண்டனர்.
அப்போது கரையிலிருந்து பக்தர்கள் அனைவரும் கடல் நீரை தலையில் தெளித்து, மீன் வளத்தை அதிகரித்து மீனவர்களை காக்க வேண்டும் என்று மனம் உருகி கடல் அன்னையை வேண்டிக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து வானில் அரை மணி நேரம் இடைவிடாது வர்ணஜாலம் காட்டிய வண்ணமயமான மத்தாப்பு வெடிகளை கண்டு மக்கள் ரசித்தனர்.
இதையும் படிங்க: ஆயிரமாண்டுகள் பழமையான அரளிப்பாறை மஞ்சுவிரட்டு விழா