நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் நடைபெறும் காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ்பெற்றதாகும். அப்போது, மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில், கங்கை முதலான புண்ணிய நதிகள் நீராடி தங்கள் பாவசுமைகளை போக்கிக் கொள்வது ஐதீகம்.
இந்த ஆண்டு ஐப்பசி முதல் நாளான இன்று, மயிலாடுதுறையில் உள்ள பிரசித்திப் பெற்ற சிவாலயங்களான அபயாம்பிகை சமேத மயூரநாதர் சுவாமி, விசாலாட்சி சமேத ஐயாரப்பர், காசிவிஸ்வநாதர் ஞானாம்பிகை சமேத வதான்யேஸ்வரர் ஆகிய ஆலயங்களிலிருந்து பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு காவிரியின் இருகரைகளிலும் எழுந்தருளினர்.
பின்னர் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் தருமபுரம் இளைய ஆதினம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர் பரமாச்சாரிய சுவாமிகள் திருவாவடுதுறை ஆதின கட்டளை ஸ்ரீமத் அமபலவாணன் தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் காவிரியில் புனித நீராடினர்.