தமிழ்நாட்டில் தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதிகளுக்கு சம்பா சாகுபடிக்காக ஆண்டு தோறும் ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம்.
மேட்டூர் அணையில் தண்ணீர் பற்றாக் குறையின் காரணமாக காலதாமதம் ஏற்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி மேட்டூரிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. அது நாகை மாவட்டத்திற்கு கால தாமதமாகவே வந்த நிலையில் வேளாங்கண்ணி, தெற்கு பொய்கைநல்லூர், பரவை உள்ளிட்ட மானாவரி பகுதி நிலபரப்புகளில் மழையை நம்பி சம்பா சாகுபடி நேரடி நெல் விதைப்பு செய்திருந்தனர்.
இந்நிலையில், நேற்றிரவு காற்றுடன்கூடிய கனமழை பெய்தது. இதில் சாகுபடி செய்திருந்த பல ஏக்கர் நிலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் கீழே சாய்ந்து விழுந்ததால் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இதற்கு அரசு நிவாரணம் வழங்கக்கோரியும் மேலும் கூட்டுறவு சங்கம் மூலம் வாங்கியக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: மணிமுக்தா அணை நீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி!