மயிலாடுதுறை : செம்பனார்கோவில் அருகே காதல் திருமணம் குறித்த சர்ச்சை காரணமாக அமாவாசை கூட்டத்தில் நடைபெற்ற பிரச்சனையில் படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
செம்பனார்கோயில் காவல் சரகத்துக்கு உட்பட்ட இளையாளூர் நரிக்குடியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் மகன் செல்வநாதன்(30). இவர் கடந்த 10 ஆம் தேதியன்று நரிக்குடியில் நடந்த அமாவாசை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். அதே கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் திருப்பூரில் வேலை செய்து கொண்டிருந்தபோது வேறு சமூகத்தை சேர்ந்த ஒரு நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், இந்த தம்பதியினர் துக்க நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் நரிக்குடிக்கு வந்து சென்றுள்ளனர்.பெண்ணின் உறவினர்களான ஆனந்த் (21), ராஜ்கிரண் (30), தீபக் (21) ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
இதுகுறித்து அமாவாசை கூட்டத்தில் வாக்குவாதம் நடைபெற்றது. அதில், ஊர்க் கட்டுப்பாட்டை மீறியது தவறு என்று செல்வநாதன் கண்டித்துள்ளார். பெண் வீட்டார் தரப்பில் இதற்கு மன்னிப்பு கேட்டு முடித்துள்ளனர்.
ஆனால் செல்வநாதன் தொடர்ந்து அதைப்பற்றி பேசிகொண்டிருந்தால் ஆத்திரமடைந்த ராஜ்கிரண், தீபக், ஆனந்த் ஆகிய மூவரும் செல்வநாதனை தாக்கி, கத்தியால் வயிற்றில் குத்தியுள்ளனர். இதில், படுகாயமடைந்த செல்வநாதனை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து செல்வநாதன் அளித்த புகாரின் பேரில் மூன்று பேரின் மீது செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், செல்வநாதன் சிகிச்சை பலனின்றி திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க: